ஒரே ஒரு வீடியோ காலில் 900 பேரின் வேலை பறிபோன சம்பவம்!
- IndiaGlitz, [Tuesday,December 07 2021]
ஆன்லைன் நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் பணியாற்றும் 900 ஊழியர்களை ஒரே ஒரு Zoom வீடியோ அழைப்பில் பணிநீக்கம் செய்த சம்பவம் தற்போது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் வெறும் 3 நிமிடத்தில் நடைபெற்று முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
Better.com எனும் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக விஷால் கார்க் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை தனது ஊழியர்களுடன் ஒரு Zoom கால் வீடியோ அழைப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், இது நீங்கள் கேட்க விரும்பும் செய்தியல்ல… நீங்கள் இந்த அழைப்பில் இருந்தால் பணிநீக்கம் செய்யப்படும் துருதிஷ்டவசமான நபர்களில் நீங்களும் ஒருவராக இருப்பது துயரமானது எனக்கூறி 900 பேரை திடீரென பணியில் இருந்து நீக்கியுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்த ஊழியர் ஒருவர், விஷால் கார்க் பேசிய வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 43 வயதான விஷால் கார்க் இதேபோன்று இதற்கு முன்பும் தனது ஊழியர்களை மொத்தமாக வேலையில் இருந்து நீக்கியுள்ளாராம்.
தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலும் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் 9% பேரை பணிநீக்கம் செய்துள்ள விஷால் ஊழியர்களை சோம்பேறிகள் எனத் திட்டியதோடு 250 பேர் ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டுமே வேலை செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.
வெறும் 3 நிமிட வீடியோ கால் அழைப்பில் விஷால் கார்க் செய்த இந்த விஷயத்திற்கு தற்போது பல தரப்புகளில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் விஷால் கார்க் இதற்கு முன்பு தனது ஊழியர்களை நீங்கள் மெதுவாக இருக்கிறீர்கள்… டம்ப் டால்பின்களின் கூட்டம் என்பது போன்ற வார்த்தைகளால் விமர்சித்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.