டெல்லி வன்முறையை பற்றி ட்ரம்ப் ஏன் வாயே திறக்கவில்லை!? பெர்னி சாண்டர்ஸ்.
- IndiaGlitz, [Thursday,February 27 2020]
டெல்லி வன்முறைச் சம்பவம் குறித்து அமெரிக்க அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது அமெரிக்க ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் கூறுகையில், “புது டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து ட்ரம்ப் ஒரு வார்த்தைக் கூட பேசாதது அவரது தலைமைப் பண்புக்கான தோல்வி. வன்முறை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோதும் அது தனக்குத் தெரியும் என்றும் ஆனால் அதுகுறித்து மோடியிடம் பேசவில்லை. காரணம், அது இந்தியாவைப் பொறுத்தது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
200 மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் இந்தியாவை தாய்நாடாகக் கொண்டவர்கள். பெரிதாகப் பரவி வரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை பலரை பலி வாங்கியுள்ளது. மனித உரிமையின் மீதான டிரம்ப்பின் தலைமை பண்புக்கு இது ஒரு தோல்வி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாண்டர்ஸ் மட்டுமல்லாது அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் டெல்லி வன்முறைத் தாக்குதலுக்கு தொடர் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.