கெத்து : ஆம்புலன்ஸ்க்காக ஜனாதிபதி காரை தடுத்து நிறுத்திய காவலர்
- IndiaGlitz, [Tuesday,June 20 2017]
முதலமைச்சர் அல்லது அமைச்சர் வருகிறார் என்றால் சுமார் அரைமணி நேரம் வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்கும் அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதைத்தான் நாம் இதுவரை பலமுறை பார்த்துள்ளோம். ஆனால் ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு வழிவேண்டும் என்பதற்காக இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதி மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்திய நேர்மையான போக்குவரத்து காவலர் ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பெங்களூரில் மெட்ரோ சேவையை தொடங்கி வைக்க இந்திய ஜனாதிபதி வருகை தந்தபோது அவரது வாகனத்தை ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு வழிவிடுவதற்காக நிஜலிங்கப்பா என்ற போக்குவரத்து காவலர் நிறுத்தியுள்ளார். உயிர் என்பது விலை மதிப்பு இல்லாதது. எனவே உயிரை காப்பாற்றும் வாகனத்திற்கு எவ்வளவு பெரிய விவிஐபி வாகனமாக இருந்தாலும் வழிவிட்டே ஆக வேண்டும் என்ற விதியை தவறாமல் கடைபிடித்த நிஜலிங்கப்பாவிற்கு நெட்டிசன்கள் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.
மேலும் பெங்களூரு கிழக்குப்பகுதி போக்குவரத்து ஆணையர் அபிசேகோயால் என்பவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நிஜலிங்கப்பவிற்கு பாராட்டு தெரிவித்ததோடு அவருக்கு சன்மானமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஒரே நாளில் நிஜலிங்கப்பா நிஜமாகவே அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.