மேட்ரிமோனியில் பெண் தேடி… ரூ.1.14 கோடியை இழந்த அப்பாவி இளைஞர்… உஷார் மக்களே!!
- IndiaGlitz, [Thursday,August 03 2023]
இங்கிலாந்தில் பணியாற்றிவரும் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொள்வதற்காக பெங்களூரு வந்த நிலையில் மேட்ரிமோனியல் தளத்தைப் பயன்படுத்தி அவரிடம் நடைபெற்ற மோசடியால் ரூ.1.14 கோடி பணத்தை இழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூரு மாநிலம் ஆர்.கே.புரத்தைச் சேர்ந்த 41 வயது இளைஞர் பிரிட்டனில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலை சம்பந்தமான பயிற்சிக்காகவும் திருமணம் செய்து கொள்வதற்காகவும் பெங்களூரு வந்த அவர், அங்கேயே தங்கியுள்ளார். இதையடுத்து திருமணத்திற்கு பெண் தேடிய அந்த இளைஞர் தன்னுடைய விவரங்களை பிரபல மேட்ரிமோனியல் தளம் ஒன்றில் பதிவிட்டு உள்ளார்.
இந்த விவரங்கள் பல்வேறு தளங்களுக்கு பகிரப்பட்டு இருக்கிறது. இதையடுத்து திருமணத்திற்காக பெண் ஒருவர் இவரை அணுகியுள்ளார். மேலும் செல்போன் மூலமாக பல விஷயங்களை இருவரும் பேசிக்கொண்ட நிலையில் அந்தப் பெண் இளைஞர் குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டுள்ளார். மேலும தனது தந்தை இறந்துவிட்டதாகவும் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கடந்த ஜுலை 2 ஆம் தேதி ரூ.1,500 பணத்தை அனுப்புமாறு கேட்டிருக்கிறார்.
இதை உடனே நிறைவேற்றிய அந்த இளைஞரிடம் மீண்டும் கடந்த ஜுலை 4 ஆம் தேதி இரவு 12 மணிக்கு அந்த பெண், வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அப்போது திடீரென ஆடைகளை எல்லாம் கலைந்துவிட்டு நிர்வாணமாகவே உரையாடி இருக்கிறார். ஆனால் இந்த உரையாடல் முழுவதையும் அந்தப் பெண் இளைஞருக்கு தெரியாமல் பதிவு செய்துகொண்ட நிலையில் அந்த வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்.
மேலும் பணத்தை அனுப்பாவிட்டால் இளைஞரின் பெற்றோருக்கு நிர்வாண வீடியோவை அனுப்ப போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் அந்தப் பெண் கேட்டதுபோல கிட்டத்தட்ட ரூ.1,14,00,000 பணத்தை இளைஞர், அந்தப் பெண் கூறிய 2 வங்கி கணக்குகள் மற்றும் 4 செல்போன் எண்களுக்கு அனுப்பியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து இளைஞரை தொந்தரவு செய்த அந்தப் பெண் மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்.
இதனால் ஒருகட்டத்தில் வெறுத்துபோன அந்த இளைஞர் காவல் துறையில் புகார் அளித்த நிலையில் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் அப்பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 84 லட்சம் பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.
திருமணத்திற்காக பெண் தேடி மேட்ரிமோனியல் பக்கத்தில் விவரங்களை பதிவிட்ட இளைஞரிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசி அதை பதிவு செய்துவைத்து மிரட்டிய கும்பல் பற்றிய தகவல் தற்போது பொதுமக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மேட்ரிமோனியல் அல்லது டேட்டிங் ஆப் என எதுவாக இருந்தாலும் உங்களைத் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம் மக்களே…