கொரோனாவுடன் பள்ளிக்கு சென்ற மாணவி: அதிரடி நடவடிக்கை எடுத்த பள்ளி நிர்வாகம்
- IndiaGlitz, [Thursday,March 12 2020]
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியர்களால் இந்தியாவிலும் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவில் சுமார் 60 பேர் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் நேற்று பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் கொரானாவால் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் இந்தியா திரும்பிய பெங்களூரை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரானா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பத்தினரும் பரிசோதனை செய்யப்பட்டபோது அவரது மனைவிக்கும் மகளுக்கும் கொரானா வைரஸ் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் கொரானா வைரஸ் தாக்கியது தெரியாமல் அவரது மகள் பள்ளிக்குச் சென்று இருப்பதாகவும் இதனால் அந்த பள்ளியில் படிக்கும் ஆயிரத்து 600 மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அந்த மாணவி படித்த வகுப்பில் உள்ள மாணவ மாணவிகள் அனைவருக்கும் கொரானா வைரஸ் தாக்கி உள்ளதா? என்பதை பரிசோதனை செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
கொரானா வைரஸ் தாக்கப்பட்ட மாணவிக்கு அருகில் உட்கார்ந்திருந்த மாணவ மாணவியர் யார்? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த வகுப்பில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் அந்த வகுப்பு மாணவர்கள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்ததும் ஐடி ஊழியர் உடனடியாக பள்ளிக்கு தகவல் தெரிவித்ததும், பள்ளி நிர்வாகம் சுதாரித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.