சிதைந்து போன முகம்! சிதையாத காதல்: உண்மைக்காதலுக்கு ஒரு உதாரணம்

  • IndiaGlitz, [Wednesday,September 27 2017]

திரைப்படங்களில் பார்க்காமலே காதல், தொலைபேசியில் காதல், கடிதத்தில் காதல் என முகம் பார்க்காத பல காதல்கள் உண்டு. ஆனால் உண்மைக்காதலில் பெரும்பாலும் அழகு, பின்னணி சிலசமயம் சாதி, மதம் பார்த்த காதல் தான் உண்டு. அதிலும் பல காதல்கள் திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் முறிவடைவது உண்டு. ஆனாலும் உண்மைக்காதல் இன்னும் உயிரோடு தான் உள்ளது என்பதற்கு உதாரணம் ஜெயப்பிரகாஷ்-சுனிதா காதல்

கடந்த 2004ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ஜெயப்பிரகாஷுக்கு பள்ளியில் படிக்கும்போதே அதாவது 17 வயதிலேயே உடன்படிக்கும் சுனிதா மீது காதல். சுனிதாவுக்கும் விருப்பம் என்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலை பகிர்ந்து கொள்ளவில்லை. மேல்படிப்புக்காக பிரிந்தாலும் அவ்வப்போது சந்திப்பு, போன், கடிதம் மூலம் தொடர்பில் இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென சுனிதா விபத்து ஒன்றில் சிக்கிவிட்டதாக நண்பர் ஒருவரின் மூலம் செய்தி அறிந்த ஜெயப்பிரகாஷ், தனது காதலியை காண கோவை சென்றார். அங்கு சுனிதாவை பார்த்தாதும் அவரது இதயமே சுக்குநூறாகிவிட்டது. முகம் சிதைந்து, கண்கள் உள்ளடங்கி அலங்கோல முகத்துடன் காட்சி அளித்தார் சுனிதா. ஆனாலும் அக அழகை காதலித்த ஜெயப்பிரகாஷூக்கு சுனிதவின் புற அழகின் அருவருப்பு தெரியவில்லை

அன்றே அவர் சுனிதாவிடம் தனது காதலை தெரிவித்தார். சுனிதாவிடம் இருந்து ஒரு புன்சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது. அதன் பின்னர் சுனிதாவின் அருகிலேயே இருந்து அவரது சிகிச்சைக்கு முழுமையாக உதவி செய்து பின்னர் பூரண குணம் அடைந்தவுடன் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது அத்மியா, அத்மிக் என்ற இரண்டு செல்லக்குழந்தைகள் உள்ளனர்.

தனது உண்மைக்காதல் குறித்து ஜெயப்பிரகாஷ் தனது ஃபேஸ்புக்கில் செய்த பதிவிற்கு லட்சக்கணக்கானோர் வாழ்த்துக்களும், ஆயிரக்கணக்கான ஷேர்களும் கிடைத்துள்ளது. இந்த உலகத்தில் புற அழகையும் மீறி அக அழகை மட்டுமே பார்த்து செய்யும் காதல் உயிருடன் தான் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா?