பெங்களூரு கனமழை, வெள்ளம் எதிரொலி: ஒரு இரவுக்கு லாட்ஜில் இத்தனை ஆயிரம் வாடகையா?
- IndiaGlitz, [Thursday,September 08 2022]
பெங்களூரு நகரில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்ததை அடுத்து சாதாரணமானவர்களின் வீடு முதல் கோடீஸ்வரர்களின் வீடு வரை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனை அடுத்து பெங்களூரில் உள்ள லாட்ஜில் ஓர் இரவு தங்குவதற்கு நாற்பதாயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் நகரில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக கனமழை பெய்ததால் நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சாமானிய மனிதர்களின் வீடுகள் மட்டுமின்றி பிரபல தொழிலதிபர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, பைஜு ரவீந்திரன் மற்றும் பிரிட்டானியா தலைமை நிர்வாக அதிகாரி வருண் பெர்ரி ஆகியோர்களின் வீடுகள் உள்பட கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதியிலும் வெள்ளம் புகுந்து விட்டது. இந்த நிலையில் பிரபல தொழிலதிபர்கள் பலர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு தற்போது லாட்ஜ்களில் தங்கி இருக்கிறார்கள்.
பெங்களூரில் உள்ள ஹோட்டல் அறைகள் வாடகைக்கு ஒரு இரவுக்கு 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல நிறுவனம் ஒன்றில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணி செய்யும் மீனா என்பவர் பழைய விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ஒரு 42 ரூபாய் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள அனைத்து ஓட்டல்களில் உள்ள அறைகள் தற்போது 10 நாட்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது ஒரு பக்கம் 40 ஆயிரம் ரூபாய் வரை ஒரு இரவுக்கு கட்டணம் வசூலித்தாலும், இன்னொரு பக்கம் ஒரு சில ஹோட்டல்களில் நல்லெண்ண அடிப்படையில் ஏற்கனவே இருக்கும் வாடகையில் இருந்து 50 சதவீதம் தள்ளுபடி விலையில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பெங்களூர் நகரில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.