ஆம்புலன்ஸ்க்கு பணமில்லை… இறந்த குழந்தையை பையில் வைத்து 200 கி.மீ பயணம் செய்த அவலம்!
- IndiaGlitz, [Monday,May 15 2023]
நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இறந்த குழந்தையை சொந்த ஊருக்குக் கொண்டுசெல்ல பணமில்லாமல் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 200 கி.மீ தூரம் வரை பேருந்தில் பயணம் செய்து அதுவும் குழந்தையைப் பையில் வைத்து எடுத்துச்சென்ற சம்பவம் பார்ப்போரைப் பதைக்க வைத்திருக்கிறது.
மேற்குவங்க மாநிலம் கலியாகஞ்ச் பகுதியில் வசித்துவருபவர் ஆஷிம் தேவ்சர்மா. இவருடைய 5 மாத இரட்டை குழந்தைகளுக்கு கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் முதலில் கலியாகஞ்ச் பகுதியிலுள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் சிலிகுரி வடக்கு வங்காள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு குழந்தை மட்டும் உடல் தேறியதால் மனைவியோடு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் ஆஷிம். ஆனால் உடல்நிலை மோசமடைந்த மற்றொரு குழந்தை சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளது. இதனால் இறந்த குழந்தையின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல மருத்துவமனை ஆம்புலன்களை அணுகியுள்ளார். அவர்கள் ரூ.8,000 செலவாகும் எனக் கூறியுள்ளனர். ஏற்கனவே சிகிச்சைக்காக ரூ.16,000 – ஐ செலவுசெய்துவிட்ட நிலையில் கையில் பணமில்லாத ஆஷிம் குழந்தையை பேருந்தில் எடுத்துச்செல்ல முடிவுசெய்துள்ளார்.
இதற்காக துணி ஒன்றில் இறந்த குழந்தையைச் சுற்றி பையில் எடுத்துக்கொண்ட அவர் சிலிகுரியில் இருந்து ராயகஞ்ச் பகுதிக்கு தனியார் பேருந்தில் 200 கி.மீ பயணம் செய்துள்ளார். பின்பு அங்கிருந்து மற்றொரு பேருந்தில் கலியாகஞ்ச் பகுதிக்கு வந்துள்ளார்.
பணமில்லாமல் இறந்த குழந்தையை துணியால் சுற்றி பையில் எடுத்துவந்த ஆஷிம், ஒருவேளை மற்றவர்களுக்குத் தெரிந்தால் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு விடுவார்களோ? என்ற பயத்தோடு பயணம் செய்ததாகவும் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தற்போது பொதுமக்களிடையே கடும் சோகத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.