கீழடியில் ரூ.12.21 கோடி மதிப்பிலான தொல்பொருள் அருங்காட்சியகம்!!! அடிக்கல் நாட்டிய தமிழக முதலமைச்சர்!!!
- IndiaGlitz, [Tuesday,July 21 2020]
2600 ஆண்டு பழமையான தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வண்ணம் பல்வேறு தொல்லியல் பொருட்கள் சிவகங்கை அருகேயுள்ள திருப்புவனத்தில் கண்டெடுக்கப் பட்டது. அப்பகுதியில் கடந்த 2014 முதல் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர் எழுத்தறிவை பெற்றிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதைத்தவிர 2600 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் நகரமயமாக்கம் நடைபெற்றதை குறிக்கும் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இதுவரை 14,635 தொல்லியல் பொருட்கள் கண்டெக்கப் பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் குறிப்பிடப் பட்டு இருக்கிறது. இந்தப் பொருட்களை மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு காட்சிப் படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் உறுதியளித்து இருந்தார். அந்த வகையில் தற்போது ரூ.12.21 கோடி மதிப்பிலான அருங்காட்சியம் அமைக்கும் பணியை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் மேடு அமைக்கப் பட்டுள்ளது. அப்பகுதியில் முதல் 3 கட்ட அழாய்வுகளை மத்தியத் தொல்லியல் துறையினர் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. பின்னர் அந்தப் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் தொல்லியல் பணி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி தமிழக தொல்லியல் துறையினர் அப்பகுதியில் அடுத்த இரண்டு கட்ட அகழாய்வினை மேற்கொண்டனர். தற்போது மணலூர், அகரம் கொந்தகை போன்ற பகுதிகளில் 6 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் இருந்து சுடுமண் உருவங்கள், தங்கத்திலான பொருட்கள், இரும்பு பொருட்கள், வட்ட சில்லுகள், ஆட்டக் காய்கள், எலும்பு முனை, சங்கு வளையல்கள், எழுத்துப் பொறிக்கப் பட்ட பானை ஓடுகள் போன்ற பல்வேறு பொருட்கள் கண்டெக்கப் பட்டது.
கண்டெடுக்கப் பட்ட பொருட்களை காட்சிப் படுத்துவதற்காக தற்போது 2 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியம் அமைக்கப் பட உள்ளது. ரூ.12.21 கோடி மதிப்பிலான அருங்காட்சியக கட்டிடப் பணியை தற்போது தமிழக முதலமைச்சர் துவங்கி வைத்திருக்கிறார். தமிழகத்தில் கீழடியில் நடைபெற்று வரும் அகழய்வு பணி உலக அளவில் தமிழர் நாகரிகத்தை மேன்மைப் படுத்துவதோடு உலகிலேயே மிகவும் பழமையான நாகரிகத்தைச் சார்ந்தவர்கள் தமிழகர்கள் என்பதையும் பறைசாற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.