பிந்துமாதவி எண்ட்ரியின் பின்னணி என்ன? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!
- IndiaGlitz, [Monday,July 31 2017]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவியாவுக்கு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற்றுள்ள 8 பேரை தவிர கிட்டத்தட்ட மொத்த தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருந்தும் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் ஓவியாவுக்கு கடுமையாக போட்டி கொடுப்பதற்காகவே பிந்துமாதவி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து திரையுலகினர் ஒன்றை நிஜமாக புரிந்து கொண்டனர் என்பதுதான் உண்மை. வாய்ப்பு இல்லாமல் சாதாரண நடிகையாக இருந்த ஒருவருக்கு இந்த அளவுக்கு ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் கிடைக்கின்றது என்றால் நாமும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கலாம் என்பதே பலரின் எண்ணமாக இருக்கின்றது. உதாரணமாக ஆரவ்வை அனேகமாக பலருக்கு தெரியாது. விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்தவர்தான். ஆனால் இன்று அவர் வெளியே வந்தால் கூட பட வாய்ப்புகள் குவியும் என்பது உறுதி. இதேபோல் கணேஷ், சக்தி, ரைசா போன்றவர்களுக்கும் அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம். ஏன் ஜூலிக்கு கூட சீரியல்களில் கொடுமையான நாத்தனார் வேடம் கிடைக்கலாம்.
இந்த நிலையில் தான் சில வாய்ப்பில்லாத முன்னணி நடிகைகள் அந்த குறிப்பிட்ட டிவியை அணுகி தங்களுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கேட்டதாகவும், ஓவியாவை இருட்டடிப்பு செய்ய காத்திருந்த அந்த டிவியும் உடனே இதற்கு சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை பிந்துமாதவிக்கு 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு பின்னர் குறிப்பிட்டு சொல்லும் வகையில் வெற்றிப்படம் வெளிவரவில்லை. எனவே ஓவியாவை போல தானும் புகழ் பெற வேண்டி, இந்த வாய்ப்பை அவர் கேட்டு பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் ஓவியாவுக்கு கிடைத்த இந்த புகழ் அவரது புற அழகிற்காக கிடைத்த புகழ் அல்ல, அவரது அக அழகிற்கு கிடைத்த வெகுமதி. அவரது கள்ளங்கபடம் இல்லாத புன்னகைக்கு கிடைத்த பரிசு. எனவே அவரை போல் பிந்துமாதவியும், இனி வருபவர்களும் அவர்களாகவே இயல்பாக இருந்தால் ரசிகர்களின் மனதை வெல்லலாம். இல்லையெனில் ஓரளவு சேர்த்து வைத்திருந்த புகழை ஜூலி, காயத்ரி போல் இழக்க வேண்டிய நிலை வரும் என்பதையும் இங்கே குறிப்பிட்டு ஆக வேண்டும். பிந்துமாதவி இன்னொரு ஓவியா ஆவாரா? அல்லது இன்னொரு ஜூலி ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்