கொரோனாவுக்கு முன்- கொரோனாவுக்குப் பின்… திடுக்கிட வைக்கும் சில தகவல்கள்!!!
- IndiaGlitz, [Friday,August 21 2020]
கொரோனா நோய்த்தொற்று மனித வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் மக்களிடம் அதிகமாகப் புழங்கப்படும் ஒரு வார்த்தையாகவும் இந்த கொரோனா மாறியிருக்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு முன் மற்றும் கொரோனாவிற்குப் பின் உள்ள மனித வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்த ஆய்வில் அதிர்ச்சி ஏற்படுத்தும் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஜி.ஓ.கியூ.ஐ.ஐ என்னும் தடுப்பு சுகாதார நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட கொரோனா வாழ்வியல் ஆய்வினை மேற்கொண்டிருக்கிறது. அதில் 10 க்கும் மேற்பட்ட மக்களிடம் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றிய நேரடியான பேட்டியும் எடுக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து கொரோனா வைரஸ் மனித வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது. மக்களின் வாழ்க்கையில் கொரோனா எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது போன்ற பல்வேறு கருத்துகணிப்புகள் வெளியிடப் பட்டிருக்கின்றன.
அந்த ஆய்வில் கொரோனா பரவல் தடுப்புக்காக போடப்பட்ட ஊரடங்கின் முதல் 21 நாட்களில் இந்திய மக்கள் சராசரி தூக்கத்தைவிட அதிகமாகத் தூங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அதிகமாகத் தூங்கி வழிந்த மக்கள் பின்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் படிபடியாக தூக்கமே இல்லாமல் அவஸ்தைப் பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதிலும் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தூக்கத்தின் அளவு மிகவும் குறைந்து முன்னர் இருந்த சராசரியை விட குறைவான சராசரியை ஏற்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. தூக்கத்தின் அளவு இயல்பாக குறையும்போது மக்களும் இயல்பாக மன அழுத்தத்திற்கு ஆளாவதையும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டியிருக்கிறது.
கொரோனா பரவலுக்கு முன், நள்ளிரவு நேரம்கழித்து தூங்கச் செல்லும் இந்திய மக்களின் சராசரி 47% ஆக இருந்தது எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவலுக்குப்பின் இந்த சராசரியில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 55% மக்கள் நள்ளிரவுக்குப் பின் தூங்கச் செல்வதாகவும் ஏப்ரல் மாதத்தில் இந்த அளவு 56% ஆகவும் மே மாதத்தில் 54% ஆகவும் ஜுன் மாதத்தில் 51% ஆகவும் கணக்கிடப் பட்டுள்ளது. இந்த சராசரி அளவுகள் ஒரு மாதிரியாக இல்லாமல் தொடர்ந்து பெருத்த மாற்றத்தைக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலும் சீரான வாழ்க்கையை மேற்கொள்வதற்கு அதிக சிரமத்தை எடுத்துக் கொள்வதாகவும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. கடந்த ஜனவரி-மார்ச் க்கு இடைப்பட்ட காலத்தில் 8 மணிக்குப் பின் எழுந்து கொள்வோரின் சராசரி 56% ஆக இருந்தது என்றும் அந்த சராசரி அடுத்த மார்ச் 22 ஆம் தேதிக்குப்பின் 33% ஆக அதிகரித்து இருக்கிறது எனவும் ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.
அதேபோல் கொரோனாவுக்கு முன் 51% நடைபயிற்சி மற்றும் வாக்கிங் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு இருந்தனர் என்றும் 20% மக்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 12% மக்கள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நடைமுறையிலும் பல மாற்றங்களை கொரோனா கொண்டு வந்திருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் 47% வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ததாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
தற்போது ஊரடங்கில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் வாக்கிங் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் கொரேனாவுக்கு முன் உடற்பயிற்சியே இல்லாமல் இருந்த 11% எண்ணிக்கை தற்போது கொரோனாவினால் 15% ஆக அதிகரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர வீட்டிலேயே சமைத்து உண்போரின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து இருக்கிறது. கடைகளில் ஆர்டர் செய்து சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் குறைந்து இருப்பதும் தெரியவந்திருக்கிறது.