அழகு இல்லாவிட்டால் சூப்பர் ஸ்டார் ஆகமுடியாதா? ராம்கோபால் வர்மாவுக்கு ஒரு விளக்கம்

  • IndiaGlitz, [Monday,April 18 2016]

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மா அவ்வப்போது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் கூறி சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தோ அல்லது அவர்களது ரசிகர்களிடம் இருந்தோ கண்டனங்கள் பெறுவது வழக்கமான ஒன்றுதான். பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே அவர் இதுபோன்ற கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கூறுவதாகவே பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது '2.0' படத்தில் நடித்து வரும் நடிகை எமிஜாக்சன் ரஜினியுடன் இணைந்து எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் குறித்து விமர்சனம் செய்துள்ள ராம்கோபால் வர்மா, 'மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த், நட்சத்திர அந்தஸ்துக்கு அழகு முக்கியம் என்ற கருத்தை தூள் தூளாக்கியுள்ளார். அழகு கிடையாது, சிக்ஸ் பேக்ஸ் உடலமைப்பு கிடையாது, சரியான நடன அசைவு கிடையாது, ஆனால் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். உலகில் வேறு எங்குமே இப்படியான ஒருவர் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது. கடவுள் இவருக்கு எப்படி இப்படி ஒரு வாழ்க்கையை தந்துள்ளார் என்பதே தெரியவில்லை. ரசிகர்களுக்கு திரைப்படத்தில் என்ன பிடிக்கும் என்பதை ஒருவரும் கணிக்க முடியாது என்பதற்கு ரஜினி சிறந்த உதாரணம். ரஜினிக்கு இந்த அளவுக்கு ரசிகர்கள் கிடைத்தது எப்படி என உலகின் உயர்ந்த மனோதத்துவ நிபுணர்கள் குழம்பிப் போய் உள்ளார்கள்' என்று தெரிவித்துள்ளார். ராம்கோபால் வர்மாவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நமது சார்பில் ஒரு விளக்கத்தை ராம்கோபால் வர்மா அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சினிமாவில் அறிமுகமாகி இன்று சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றவர் இல்லை. 'அபூர்வ ராகங்கள்' படத்தில் சின்ன கேரக்டரில் அறிமுகமாகி அதன் பின்னர் இரண்டாவது நாயகனாக, வில்லனாக நடித்து பின்னர் படிப்படியாக ஹீரோ அந்தஸ்தை பெற்றவர். மேலும் நடிக்க வருவதற்கு முன்னரே திரைப்பட கல்லூரியில் முறைப்படி நடிப்பு என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டு அதன் பின்னர்தான் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். அவரது நடிப்புக்கு சான்றாக 'ஆறிலிருந்து அறுபது வரை', எங்கேயோ கேட்ட குரல்', ஸ்ரீராகவேந்திரர், 'பாட்ஷா' போன்ற பல படங்களை குறிப்பிடலாம். ஒரு காலகட்டத்தில் தனது ரசிகர்களின் விருப்பத்திற்காகவும், தன்னை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் மசாலா கலந்த கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இருப்பினும் தனது படங்களில் ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்களை அவர் அனுமதிப்பதே இல்லை. ரஜினி படம் என்றாலே குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் என்ற நிலைதான் இன்றும் உள்ளது.

திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு மட்டுமின்றி எந்த ஒரு துறையிலும் உச்சத்திற்கு செல்ல வேண்டுமானால் அதற்கு சிக்ஸ்பேக் உடற்கட்டோ அல்லது அழகோ தேவையில்லை. திறமை, உண்மையான உழைப்பு, மக்கள் மனதில் புரிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்தவாறு செயல்படுதல் ஆகியவை போதும். இதற்கு காமராஜர் போன்ற பல உதாரண மனிதர்களை கூறலாம். ஒரே ஒரு குரல் கொடுத்து ஒரு ஆட்சியையே மாற்றியவர், பாரத நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற ஒருவரை விமர்சிக்கும் முன் சற்று யோசிக்க வேண்டும் என்பதே இப்போதைக்கு ராம்கோபால் வர்மா போன்றவர்களுக்கு நாம் கூறிக்கொள்ளும் தாழ்வான அபிப்பிராயம்.

இந்நிலையில் தன்னுடைய கருத்துக்கள் அனைத்துமே ரஜினிகாந்த் அவர்களை இழிவு செய்யும் நோக்கத்தில் கூறப்பட்டது அல்ல என்றும் அவரை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் தெரிவித்ததாகவும், ரஜினி ரசிகர்கள் தன்னுடைய கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.