டெஸ்ட் கேப்டன் பதவிக்கும் ஆபத்தா? கோலி குறித்து ஆலோசனை நடத்திய பிசிசிஐ!
- IndiaGlitz, [Friday,December 17 2021] Sports News
நேற்றுமுன்தினம் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விராட் கோலி டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தபோது அதுபற்றி தலைவர் கங்குலி தன்னிடம் பேசவில்லை என்றும் மேலும் ஒருநாள் போட்டியின் கேப்டன்சி தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டபோதும் அவர் அதுப்பற்றி விவாதிக்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இதனால் பிசிசிஐ தலைவர் கங்குலி மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒருசிலர் கேப்டன் விராட் கோலிக்கு பிசிசிஐ துரோகம் இழைத்துவிட்டதாக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிசிசிஐ செயல்தலைவர் ஜெய்ஷா, ஆன்லைன் மூலம் தலைவர் கங்குலியுடன் அவசர ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதில் பிரச்சனைக்குரிய விஷயங்களை விராட் கோலி தொடர்ந்து பொதுவெளியில் பேசிவருவதாகவும் பிசிசிஐயின் விதிமுறைகளை அவர் மீறுவதாகவும் ஜெய்ஷா கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலளித்த தலைவர் கங்குலி தற்போது இந்த விவகாரம் குறித்து பேசினால் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் குழப்பம் ஏற்படும். எனவே தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் முடிந்தபின்பு கேப்டன்ஷி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியதாக பிசிசிஐ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விராட் கோலி நடந்து கொள்வதைப் பொருத்தே அவருடைய எதிர்காலம் அமையும். ஏற்கனவே டெஸ்ட் பேட்டிங்கில் அவர் ஃபார்ம் இல்லாமல் இருக்கிறார். தொடர்ந்து அணித்தேர்வு மற்றும் பயிற்சியாளர் டிராட்டுடன் அவர் முரண்பட்டால் டெஸ்ட் கேப்டன்ஷி பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்பட்டு வருகிறது.