பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது இந்தியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் உள்ள சவுரவ் கங்குலிக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

நேற்று மாலை முதல் காய்ச்சலால் அவதிப்பட்ட கங்குலியை அவரது குடும்பத்தினர் கொல்கத்தாவில் உள்ள வுட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தீவிரக் கண்காணிப்பில் இருக்குமாறு வலியுறுத்தியதை அடுத்து உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பரிசோதனைக்கான முடிவு இன்று காலை வெளியானதைத் தொடர்ந்து கங்குலிக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஜீன் பரிசோதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கங்குலியின் உடல்நிலை குறித்துப்பேசிய வுட்லேண்ட் மருத்துவமனை மருத்துவர்கள் அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய இதயத்தில் 2 ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்டன. மேலும் மற்றொரு முறை கடுமையான உடல்நலப் பாதிப்பால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக அவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கங்குலிக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று விசாரித்தபோது அவர் அகமதாபாத் ஐபிஎல் அணியின் மோசடி புகார்களை விசாரித்து வந்தநிலையில் பிரபல பெங்காலி மொழி நடிகரும் எம்.பியுமான தேவ் நடித்த “டோனிக்“ என்ற திரைப்படத்திற்கு பிரபலங்கள், நடிகர்களுடன் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தத் தொடர்பின் மூலமே கங்குலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.