தோனி எதற்கு? கேள்வி கேட்டவர்களுக்கு நெற்றியடி பதில் கொடுத்த கங்குலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டதைப் பார்த்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இருக்கும்போது எம்.எஸ்.தோனியை ஏன் நியமிக்க வேண்டும்? என்பதுபோன்ற சந்தேகத்தையும் சில வீரர்கள் வெளிப்படையாக எழுப்பி இருந்தனர்.
தோனியின் ஆலோசகர் பதவிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தாலும் இந்த தேர்வில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ? என்ற கேள்வி அவர்களை ஓயாமல் துளைத்தெடுத்து வந்தது. இந்நிலையில் தோனியின் ஆலோசகர் பதவி தேர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்து பிசிசிஐயின் தலைவர் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
அதில் “ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாக் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் அணியின் ஆலோசகராக செயல்பட்டார். அது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பயனாக அமைந்தது. அதேபோன்றுதான் தோனியின் இந்தப் பதவியும். தோனியின் அனுபவமும் நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு கூடுதல் பயனாக இருக்கும்.
அதுமட்டுமின்றி இந்திய அணிக்கு சற்று உதவிசெய்யும் வகையில் இவரது ஆலோசகர் பதவி இருக்கும். உலகக் கோப்பைக்காக மட்டுமல்ல அவரால் நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய அளவில் பங்காற்ற முடியும். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அதிக அனுபவம் உடையவர். இந்திய அணிக்கு நிச்சயம் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவார். கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐசிசி தொடரை வெல்லாமல் இருக்கும் இந்திய அணிக்கு அவருடைய ஆலோசனைகள் கண்டிப்பாக உதவும்” என்று கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
தோனியின் புதிய பதவிக்கு இடையே இந்திய கேப்டன் விராட் கோலி குறித்தும் சில விமர்சனங்கள் சூடு பிடித்து இருக்கின்றன. அதாவது அணித்தேர்வில் விராட் கோலி சொதப்புகிறார். அதோடு போட்டிகளில் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டால் அதை அவரால் சமாளிக்கவே முடிவதில்லை. மேலும் பேட்டிங்கிலும் அவர் ஃபாமில் இல்லை. அதோடு கடந்த 2013 ஆம் ஆண்டு தோனி தலைமைக்கு பிறகு கோலி ஒருமுறைகூட ஐசிசி கோப்பையை இந்திய அணிக்காகப் பெற்றுத்தர வில்லை. இத்தனை எதிர்மறையான விஷயங்கள் இருக்கும்போது ஆலோசகராக தோனியை நியமிப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் டி20 உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது பதவியைவிட்டு விலகுகிறார். இதனால் வரப்போகின்ற 2023 உலகக்கோப்பை போட்டிக்கு இதுவே முன்னோடியாக இருக்கலாம் எனவும் கருத்துக் கூறப்படுகிறது.
இத்தனை விஷயங்களைக் காட்டிலும் தல தோனிக்கு குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக அனுபவம் உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை, 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பை ஆகியவற்றை வென்றுக் கொடுத்துள்ளார். இந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் அவருக்கு ஆலோசகர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆலோசகர் பதவி இந்திய அணிக்கு நிச்சயம் வெற்றிக்கோப்பையை பெற்றுத்தரும் எனப் பலரும் ஆருடம் கணித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout