பிசிசிஐ போட்ட புது திட்டம்… 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குழப்பம் தீருமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி யாருக்கு எனத் தீர்மானிக்க முடியாத நிலையில், மீண்டும் இந்த 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்தி, வெற்றியை தீர்மானித்துக் கொள்ளலாம் என பிசிசிஐ தாமாக முன்வந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிக் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வந்தது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்ததால் 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் 5 ஆவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்துகொள்ளலாம் என பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் போட்டி விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆனால் 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி யாருக்கு என்ற குழப்பம் கடந்த சில தினங்களாக கிரிக்கெட் ரசிகர்களிடைய கடும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது. இந்தப் பிரச்சனையில் இந்தியப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர், பிசியோ தெரபிஸ்ட் உட்பட இந்திய அணியில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பிசிசிஐ போட்டியை விலக்கிக் கொள்ளலாம் என கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கை போட்டி நடைபெற இருந்த 2 மணி நேரத்திற்கு முன்பு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதில் பிசிசிஐ கொரோனா காரணமாக போட்டியை ரத்துச் செய்திருந்தாலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தக் காரணத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களிடையே இருந்த மனநிலை மற்றும் அணிக்குள் இருந்த குழப்பம் காரணமாக போட்டியை ரத்துக் செய்து கொண்டனர். இதனால் இங்கிலாந்து அணிக்கு புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி டாம் ஹாதின் கேட்டுக்கொண்டார்.
ஐசிசி விதிகளின்படி சர்வதேசப் போட்டிகளில் ஒரு அணியோ அல்லது இரு அணிகளோ சேர்ந்து போட்டியை ரத்துச் செய்துகொண்டால் புள்ளிகள் எதுவும் வழங்கப்படாது. மேலும் ஏற்கனவே இருந்த புள்ளிகளின் அடிப்படையில் வெற்றித் தீர்மானிக்கப்படும். ஆனால் இந்த 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தியா கூறும் காரணங்களை ஒப்புக்கொள்ளாமல் வெற்றி யாருக்கு என தீர்மானிக்கும் வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐசிசிக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
எனவே இந்தக் குழப்பத்தை தீர்க்கும் வகையில் இந்தியாவின் பிசிசிஐ ஒரு புது திட்டம் தீட்டியிருக்கிறது. இதன்படி இந்திய அணி வரும் 2022 ஜுலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப் பயணத்தின்போது 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. அப்போது ஒத்திவைக்கப்பட்ட 5 ஆவது டெஸ்ட் போட்டியையும் விளையாடி வெற்றியை தீர்மானித்துக் கொள்ளலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு தனது கருத்தை தெரிவித்து உள்ளது. இதனால் 5 ஆவது டெஸ்ட் போட்டி குறித்த முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்தானதால் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.304 கோடி நஷ்டம் ஆனதாகத் தகவல் கூறப்படுகிறது. தொலைக்காட்சிகளில் போட்டியை ஒளிப்பரப்பும் உரிமையை பெற்ற நிறுவனத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பணத்தை திரும்பக் கொடுத்து வருகிறதாம். அதோடு போட்டி நடைபெற இருந்த ஓல்ட் ட்ராஃபாட் மைதானத்தில் 5 நாள் போட்டிக்கான டிக்கெட் முழுவதும் விற்கப்பட்டு விட்டதாம். இதனால் அதற்கான பணத்தையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப கொடுத்து வருகிறது.
இதுபோன்ற காரணங்களால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்கள் மேல் அதிக காட்டத்துடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout