சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் வௌவால்கள்!!! இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் தேசிய வைராலஜி ஆராய்ச்சிக் கழகம் இரண்டும் இணைந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வாழ்கின்ற 25 வகையான வௌவால்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டன. அதில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய பகுதிகளில் வாழும் இரண்டு வகை வௌவால்களிடம் கொரோனா வைரஸ் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியது. உண்மையில் “இந்தியன் ஃபிளையிங் ஃபாக்ஸ்” மற்றும் “ரௌசெடஸ்” வகை வௌவால்களிடம் இருப்பது கொரோனா வைரஸின் ஒரு துணை வைரஸ் மட்டுமே. ஆனால் ஊடகங்கள் வௌவால்களிடம் இருப்பது கொரோனா வைரஸ் என்று செய்தி வெளியிட்டதால் பரபரப்பு கிளம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த ஆராய்ச்சியில் 508 “இந்தியன் ஃபிளையிங் ஃபாக்ஸ்” வௌவால்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 21 வௌவால்களுக்கு கொரோனா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் கேரளா-4, புதுச்சேரி-6, ஹிமாச்சல்-1, தமிழகம்-1 என்பதும் குறிப்பிடத்தக்கது. 78 “ரௌசெடஸ்” வகை வௌவால்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 4 வௌவால்களுக்கு கொரோனா இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதில் நான்குமே கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட வௌவால்கள் ஆகும்.
உண்மையில் வௌவால்களில் கண்டறியப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ்கள் முழுமையான கொரோனா வைரஸ் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் குறிப்பிடவில்லை. அதேபோல வெளாவல்களில் உள்ள ரெக்டம் என்ற பகுதியல் மட்டுமே இந்த நோய்த்தொற்று உள்ளது. அதாவது வௌவால்களின் பின்புறத்தில் மட்டும் ஓரிடத்தில் கொரோனா நோய்த்தொற்று இருப்பதாகக் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தொண்டை வலி, சளி, நுரையீரல் பாதிப்பு போன்ற எந்த அறிகுறிகளும் வௌவால்களுக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வௌவால்களிடம் காணப்படும் கொரோனாவின் துணை வைரஸ், மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் வைரஸில் இருந்து முற்றிலும் வேறுபட்டது எனவும் ICMR குறிப்பிட்டு இருக்கிறது. இது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற வகையிலான ஆராய்ச்சிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.
வௌவால்களிடம் இருந்து கொரோனா மனிதர்களுக்கு பரவுமா???
கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து முன்னதாக Scripps Research Scientists நடத்திய ஆய்வில் “இந்த வைரஸ் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டதல்ல என்பதைத் தெளிவுப்படுத்தியது. மேலும், மற்ற கொரோனா வகை SARS-CoV வைரஸ்களில் இருக்கும் புரதத்தைவிட புதிய SARS-CoV-2 வைரஸின் புரதம் ஆற்றல் குறைந்தவை என்றும் கொரோனா வைரஸ் கொடிய நோய்த்தொற்றாக இல்லாமல் வவ்வால்களை தாக்கும் SARS-CoV வைரஸ் போன்றே இருக்கிறது எனவும் குறிப்பிட்டது. அதோடு, எறும்புத்திண்ணி Ant- eater களில் இருக்கும் வைரஸ்களை ஒத்தும் இந்த புதிய நாவல் கொரோனா வைரஸ் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.
உலகம் முழுவதும் ஒரு புதிய நோய்த்தொற்று ஏற்பட்டால் முதலில் வௌவால்களே பழிச்சொல்லுக்கு ஆளாகின்றன. ஏனெனில் வௌவால்கள் எண்ணற்ற நோய்க்கிருமிகளின் கூடாரமாகவே இருக்கிறது. ஆனால் வௌவால்களிடம் நோய்க்கிருமிகளை தாக்கி அழிக்கும், நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் திறனுடையதாக இருப்பதால் வௌவால்கள் எந்த நோய்க்கிருமிகளிடமும் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்கின்றன.
வௌவால்கள் மட்டுமல்ல உலகில் இதுவரை எந்தவொரு விலங்கினத்திடம் இருந்தும் நேரடியாக வைரஸ்கள் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக ஆதாரங்கள் எதுவுமில்லை. புதிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு எப்படி நோய்த்தொற்றை ஏற்படுத்தியிருக்கும் என்பது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து ஆய்வுகளிலும் ஒருமித்த முடிவான வௌவால்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் SARS-CoV வைரஸ் எறும்புத்திண்ணியிடம் சென்றிருக்கும். எறும்புத்திண்ணியிடம் இருந்து நோய்த்தொற்றானது மனிதர்களுக்கு பரவியிருக்கும். மனிதர்களுக்கு வைரஸ் கிருமிகள் பரவும்போதும் அது நோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மனிதர்களின் செல்லுக்குள் புகுந்தபின்பு நோயை ஏற்டுத்தும் ஆற்றல் கொண்டவையாக அது வளர்ச்சி அடைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
உண்மையில் சீனாவில் என்ன நடந்திருக்கும் என்பன போன்ற விசாரணைகள் தற்போது நடந்துவருகின்றன. சீனாவின் இறைச்சி சந்தைகளில் எறும்புத்திண்ணி, வௌவால், முள்ளம்பன்றி, ஆமை, முதலை போன்ற உணவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வுஹான் மாகாணத்தில் இருக்கும் இறைச்சிக் கூடத்தில் தடை செய்யப்பட்ட பல இறைச்சிகள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது அதைக்கூட கொரோனா நோய்க்கு குற்றமாகச் சொல்லமுடியாது. அந்த இறைச்சிகள் விற்பனை செய்யும் விதம்தான் தற்போது பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கும் என ஒருவாறு ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர்.
இறைச்சிக் கூடங்களில் பலப் பெட்டிகளில் எறும்புத்திண்ணி, வௌவால், முள்ளம்பன்றி, ஆமை, முதலை போன்ற விலங்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இவை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும்போது ஒரு விலங்கின் சிறுநீர், மற்ற விலங்குகள் மீது எளிதாக படுகிறது. இப்படி ஒரு விலங்கின் வைரஸ் கிருமிகள் மற்ற விலங்குகளுக்கு எளிதாக கடத்தப்படுகின்றன.
உலகம் முழுவதும் பெருகி வரும் காடு அழிப்பு, வாழ்வாதாரப் பாதிப்பு போன்ற தன்மைகளால் வௌவால் போன்ற விலங்குகளின் நோய் எதிர்ப்பு மண்டலங்கள் பாதிப்படைந்திருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். ஒருவேளை வௌவால்களில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றல் திறனிழந்து அவை நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளை எறும்பு திண்ணிக்கு கடத்தியிருக்கலாம். எறும்புத்திண்ணிகளின் இறைச்சி மூலம் அவை மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
ஆனால் விலங்குகளிடம் உள்ள வைரஸ்கள் மனிதர்களுக்கு நேரடியாக நோயை ஏற்படுத்தாது என்ற கருத்தில் அனைத்து விஞ்ஞானிகளும் ஒன்றுபடுகின்றனர். முன்னதாக சீனாவில் இரண்டு நாய்களுக்கும் அமெரிக்காவில் ஒரு புலிக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் விலங்குகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது சோதனையில் உறுதிச்செய்யப்பட்டாலும் அந்த நோய்த்தொற்றால் விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 120 சிற்றினங்களைச் சார்ந்த வௌவால்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் தென் மாநிலங்களைச் சார்ந்த வௌவால்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக வெளியான செய்திகளால் மேலும் பரபரப்பு அதிகமாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் கொரோனாவில் உள்ள ஒரு துணை வைரஸ் மட்டுமே என்பது தற்போது உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை வௌவால்களில் உள்ள வைரஸ்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துமா என்பது குறித்த தெளிவான புரிதல்கள் இன்னும் ஆய்வாளர்களையே எட்டவில்லை என்பதே நிதர்சனம். எனவே விலங்குகளிடம் இருக்கும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? விலங்கு, மனிதன் என இருவேறு உயிரினங்களிடம் இந்த கொரோனா வைரஸ் எப்படி வேறுபட்ட தன்மையுடன் இருக்கிறது என்பதைப்போன்ற ஆய்வுகள் முடுக்கிவிடப்பட வேண்டியது அவசியமான ஒன்று.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments