தமிழக முதல்வர் விரைவில் குணமாக பாரதிராஜா வாழ்த்து

  • IndiaGlitz, [Monday,September 26 2016]

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் இன்றி சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் பூரண குணமடைந்துவிட்டதாகவும், வெகுவிரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
முதல்வர் விரைவில் குணமடைய ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் முதல்வரின் உடல் நலம் குணமாக இறைவனை பிரார்த்திப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்ந்த நிர்வாகம், துணிச்சல், ஒளிவு மறைவு இல்லாத பட்டவர்த்தனம், பாரதியாரின் சொல்லுக்கு ஏற்ப நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறி கொண்ட, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், மீண்டும் புதுப்பொலிவுடனும், புத்துணர்ச்சியுடனும், முழு ஆரோக்கியத்துடனும் வெளிவந்து ஆட்சிபணீகளை சிறப்புற ஆற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்'.
இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்