ஜோ பிடனின் புதிய நிர்வாகத்தில் பராக் ஒபாமாவா??? பரபரப்பை கிளப்பும் புது தகவல்!!!
- IndiaGlitz, [Monday,November 16 2020]
ஒருவழியாக அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து அதன் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இத்தேர்தலில் டிரம்ப் படுதோல்வி அடைந்து இருந்தாலும் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள அவர் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். மேலும் நடந்து முடிந்த தேர்தலில் பெரும் முறைகேடு நடைபெற்று இருக்கிறது. அதை சட்டப்பூர்வமாகத் தீர்த்துக் கொள்வேன் எனத் தொடர்ந்து இதுவரையிலும் கூறிவருகிறார். இதற்கிடையில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி ஜோ பிடன் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்க இருக்கிறார்.
முன்னதாக பாரக் ஒபாமா 2009, 2017 என 2 முறை அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது அவருடைய நிர்வாகத்தில் ஜோ பிடன் துணை அதிபராகப் பொறுப்பு வகித்தார். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கமான புரிதல் உணர்வு இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போதைய தேர்தலிலும் ஜோ பிடனுக்கு ஆதரவாக ஒபாமா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நெருக்கம் காரணமாக தற்போது ஜோ பிடன் உருவாக்க இருக்கும் தனது புதிய நிர்வாகச் சபையில் ஒபாமாவிற்கு முக்கிய இடம் ஒதுக்குவார் எனக் கடந்த சில தினங்களாக ஊடகங்கள் பரபரப்பை கிளப்பி வந்தன.
ஆனால் இதுதொடர்பாக பேசிய ஒபாமா, “அவருக்கு என் ஆலோசனை தேவை இல்லை. என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் நான் அவருக்கு உதவுவேன். இப்போது வெள்ளை மாளிகையில் மீண்டும் வேலை செய்ய திட்டமிடவில்லை. மேலும் புதிய நிர்வாகத்தில் நான் சில விஷயங்களை செய்யமாட்டேன். ஏனென்றால் மிஷெல் என்னை விட்டு பிரிந்து விடுவார்” எனக் கிண்டலாகப் பதில் அளித்து இருக்கிறார்.
இந்நிலையில் ஜோ பிடன் தன்னுடைய புதிய நிர்வாகத்தில் ஏற்கனவே தன்னுடைய பணியாற்றிய சூசன் ரைஸ், மிகெல்லி ஃப்ளோர்னி போன்றோருக்கு வாய்ப்பு அளிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. மேலும் ஜோ பிடனின் புதிய நிர்வாகத்தில் 2 தலைமை பதவிகள் உட்பட 21 இந்தியர்கள் பொறுப்பு வகிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.