ஆசிபா கொலை குறித்து சர்ச்சை கருத்து: பணியில் இருந்து நீக்கப்பட்ட வங்கி அதிகாரி
- IndiaGlitz, [Saturday,April 14 2018]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆசிபா கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணமான குற்றவாளிகளை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று அனைவரும் ஆத்திரத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோடாக் மகேந்திர வங்கியில் பணிபுரியும் நந்தகுமார் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில், 'நல்லவேளை இந்த சிறுமி இப்போதே கொல்லப்பட்டுவிட்டார், இல்லையெனில் அவர் வளர்ந்து பெரிய ஆளாக ஆனவுடன் துப்பாக்கியை கையில் ஏந்தி இந்தியாவுக்கு எதிராக போராடியிருப்பார்' என்ற கருத்தை பதிவு செய்தார்.
நந்தகுமாரின் கருத்துக்கு ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தன. அவர் பணிபுரியும் வங்கி நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் கோடாக் வங்கியின் கணக்குகளை முடிக்க போவதாகவும் ஆயிரக்கணக்கானோர் பதிலடி கொடுத்தனர்
இந்த நிலையில் நந்தகுமாரின் மோசமான பணித்திறன் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக அவர் ஏப்ரல் 11ஆம் தேதியில் இருந்து அவரை பணியில் இருந்து நீக்குவதாக கோடாக் வங்கி அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என்றும், நந்தகுமார் பணியில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், சஸ்பெண்ட் மட்டும் ஆகியிருப்பதாகவும் ஒருசிலர் கருத்து கூறி வருகின்றனர்.,