வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட்டு போய்விட்டதா? அப்போ இந்தத் தகவல் உங்களுக்குத்தான்…
Send us your feedback to audioarticles@vaarta.com
வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு விட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்பார்கள்? சம்பந்தப்பட்ட வங்கி அதைத் திருப்பி கொடுக்குமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. இந்நிலையில் தேசிய நுகர்வோர் ஆணையம் விசாரணை செய்த ஒரு வழக்கில் ஹேக்கர்கள் திருடிய பணத்தை சம்பந்தப்பட்ட வங்கியே அந்தப் பெண்ணுக்கு திருப்பி கொடுத்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரு தனியார் வங்கியில் இருந்து ஜெஸ்னா ஜோஸ் எனும் பெண் கிரெடிட் கார்டை வாங்கி இருக்கிறார். அந்த கார்டில் இருந்து கடந்த 2008 ஆம் ஆண்டில் மட்டும் 29 முறை சுமார் ரூ.3 லட்சத்திற்கு பரிவர்த்தனை செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த பரிவர்த்தனைகளை அந்தப் பெண் செய்யவில்லை என்றும் தனக்கு தெரியாமல் யாரோ ஹேக்கர்கள் செய்துவிட்டர்கள் என்றும் புகார் அளித்து உள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு வங்கி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அந்தப் பெண் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தபட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டு இருக்கிறது. அதற்கு பதில் அளித்த வங்கி அதிகாரிகள் கிரெடிட் கார்டு தொலைந்து போய்விட்டதற்கான ஆதாரம் எதையும் அந்தப் பெண் எங்களிடம் கொடுக்கவில்லை. அதனால் அந்தப் பணத்திற்கு நாங்கள் பொறுப்பு ஏற்கமுடியாது எனக் கூறினர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் ஹேக்கர்கள், ஹேக்கர்கள் அந்தப் பெண்ணின் கிரெடிட் கார்டை மட்டும் திருடவில்லை. உங்கள் வங்கியின் அமைப்பை மோசடி செய்தே பணத்தை திருடி இருக்கின்றனர்.
எனவே அந்தப் பெண்ணிற்கான இழப்பீட்டை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனால் திருட்டு போன ரூ.3 லட்சத்தோடு சேர்ந்து கடந்த 12 வருடமாக இதே மன உளைச்சலோடு இருந்த அவருக்கு நட்டத்தொகையாக மேலும் ரூ.80 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஹேக்கர்களோ அல்லது வங்கி மோசடியோ அது எதுவாக இருந்தாலும் பணம் திருட்டு போய்விட்டதற்கான ஆதாரத்தோடு முதலில் புகார் செய்யவேண்டும். அடுத்து புகார் அளித்துவிட்டு வங்கி சொல்லும் விளக்கத்தை கேட்டுக் கொண்டு அப்படியே விட்டு விடக்கூடாது. மோசடி மற்றும் ஹேக்கர்களின் கைவரிசைக்கு வங்கிகளின் சாப்ட்வேர் அமைப்புகளும் ஒரு காரணம்தான். அதனால் அவர்களையும் பொறுப்பாளிகளாக ஆக்க வேண்டும். பணம் திருட்டுப்போனால் அதற்கு நாம் மட்டும் பொறுப்பு அல்ல. நம்முடைய பணத்தை பத்திரமாக வைத்து இருக்க வேண்டிய வங்கிகளும்தான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments