வேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: சொன்னபடி தற்கொலை செய்த வங்கி அதிகாரி!
- IndiaGlitz, [Saturday,October 31 2020]
பல ஆண்டுகளாக வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் தனக்கு வேலை கிடைத்தால் தனது உயிரையே காணிக்கையாக தருவதாக நேர்த்திக்கடன் நேர்ந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு சமீபத்தில் வங்கி அதிகாரி பணி வேலை கிடைத்தவுடன் தன்னுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே புத்தேரி என்ற பகுதியை சேர்ந்தவர் நவீன். 32 வயதான இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு பல ஆண்டுகளாக வேலையில்லாமல் இருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் மன விரக்தி அடைந்த அவர் தனக்கு வேலை கிடைத்தால் தன்னுடைய உயிரையே காணிக்கையாக அளிப்பதாக கடவுளிடம் நேர்த்திக்கடன் செய்திருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு மும்பையில் உள்ள வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது. வேலைக்கு சேர்ந்த ஒரு சில நாட்களில் விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊர் வந்த நவீன், திடீரென ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அப்பொழுது அவருடைய சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த கடிதத்தில் தனக்கு வேலை கிடைத்தால் தன்னுடைய உயிரையே காணிக்கையாக தருவதாக கடவுளிடம் நேர்த்திக்கடன் செய்து கொண்டதாகவும் அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் குறித்து தகவல் அறிந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .
வேலை கிடைத்தால் உயிரையே விடுவதாக நேர்த்திக்கடன் செய்த வாலிபர் ஒருவர் வேலை கிடைத்தவுடன் சொன்னபடியே தன்னுடைய உயிரையே விட்டு இருப்பது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.