வங்கி ஊழியரை விரட்டி விரட்டி அடித்த பொதுமக்கள்.

  • IndiaGlitz, [Tuesday,December 20 2016]

கடந்த மாதம் 8ஆம் தேதி பிரதமரின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு இப்போதைக்கு நீங்கும் என்று தெரியவில்லை. மனதுக்குள் கொந்தளித்து கொண்டிருக்கின்ற பொதுமக்கள் எந்த நேரத்திலும் கலவரத்தில் ஈடுபடலாம் என்ற அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக டிஜிட்டல் பணவர்த்தனை குறித்து விழிப்புணர்வு இல்லாத கிராம பகுதிகளில் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டே 'வங்கிகளின் வெளியே மக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். அவர்கள் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள். இதேநிலை நீடித்தால் கலவரம் ஏற்படலாம் என்று எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் பயந்தவாறே நேற்று அலகாபாத்தில் ஒரு வன்முறை சம்பவம் நடந்துள்ளது. பணப்பற்றாக்குறை காரணமாக வங்கியில் பணமில்லை என்று கூறிய வங்கி ஊழியர் ஒருவரை பொதுமக்கள் விரட்டி விரட்டி அடித்தனர். இதனால் அந்த வங்கி ஊழியர் அதிர்ச்சி அடைந்து வங்கியில் இருந்து வெளியே ஓடினார். இருப்பினும் பொதுமக்கள் அவரை தொடர்ந்து அடித்தனர். வங்கியில் இருந்த மற்ற ஊழியர்கள் உள்பட யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.

இந்த சம்பவம் ஒரு ஆரம்பம்தான் என்றும் இதேபோன்று நாடு முழுவதும் பொதுமக்கள் கொதித்தெழுந்து அது கலவரமாக ஏற்படும் முன் மத்திய அரசு பணப்பற்றாக்குறை பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.