எங்களுக்கு 5 ரன்கள் கொடுத்திருக்கணும்: விராத் செய்த தவறை சுட்டிக்காட்டிய வங்கதேச வீரர்

விராத் கோஹ்லி செய்த தவறுக்கு எங்களுக்கு 5 ரன்கள் கொடுத்து இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு கொடுத்திருந்தால் நாங்கள் தான் அந்த போட்டியை வென்று இருப்போம் என்றும் வங்கதேச விக்கெட் கீப்பர்  தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக இருந்ததால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் இந்திய பந்துவீச்சாளர்களை கதிகலங்க செய்தார்.

ஆனால் திடீரென மழை பெய்ததை அடுத்து போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வங்கதேச அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் 15 ரன்கள் மட்டுமே வங்கதேச அணி எடுத்ததால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த போட்டியின் 7-வது ஓவரில் பேட்ஸ்மேன் பந்தை அடித்த போது அந்த பந்தை கோட்டை விட்ட விராட் கோலி பிடித்தது போல பாவனை செய்தார். இதற்கு ஃபேக் பில்டிங் என்ற வகையில் 5 ரன்கள் பெனால்டி ரன்களாக நடுவர் எங்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். பேட்ஸ்மேனை திசை திருப்பும் செயலை செய்த விராத் கோஹ்லியை நடுவர் கண்டிக்காமல், நாங்கள் வாதாடியும் அந்த 5 ரன்களை நடுவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் நாங்கள் அந்த போட்டியை இழந்தோம் என்று வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹாசன்கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.