மகனுக்கு கொரோனா இருப்பதை மறைத்த பெண் அதிகாரி சஸ்பெண்ட்
- IndiaGlitz, [Friday,March 20 2020]
கொரோனா பாதிப்புக்கு எதிராக மத்திய அரசும் நாட்டின் அனைத்து மாநில அரசும் தீவிரமாக போராடி வருகின்றன. ஒருவருக்கு தொற்றிய கொரோனா இன்னொருவருக்கு பரவக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தி வரப்படுகிறது. இந்த விஷயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டியது அவருக்கு மட்டுமின்றி சுற்றி இருப்பவருக்கும் மிகவும் அவசியமானதாகும்.
இந்த நிலையில் பெங்களூருவில் மகனுக்கு கொரோனா இருப்பதை மறைத்த பெண் ரயில்வே அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயினில் இருந்து திரும்பிய பெண் ரயில்வே அதிகாரியின் மகனுக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் தனது மகனுக்கு கொரோனா இருப்பது ஊருக்குள் தெரிந்தால் குடும்பத்திற்கு பிரச்சனை வரும் என நினைத்து மறைத்துள்ளதாக தெரிகிறது.
மகனையும் குடும்ப மானத்தையும் பாதுகாக்க அவர் செய்த காரியத்தால் பலருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனையடுத்து பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, அவரது மகன் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகனால் யார் யாருக்கு கொரோனா பரவியுள்ளது என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.