கொரோனா வைரஸை விட கொடியது: ஐடி ஊழியரின் அட்டூழியம்

  • IndiaGlitz, [Saturday,March 28 2020]

உலகமெங்கும் மிக மோசமாக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். எப்படியாவது தன் நாட்டு மக்களை கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என இந்தியா உள்பட ஒவ்வொரு நாடுகளும் அதி தீவிரமான முயற்சிகளை செய்து வரும் நிலையில் ஒரு சிலர் வேண்டுமென்றே கொரோனாவை பரப்பியும், கொரோனா குறித்த தவறான தகவல்களை வதந்தியாக பரப்பியும் வருகின்றனர்

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒரு இளைஞர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’கொரோனா வைரஸ் பரப்புங்கள்’ என்றும், ’பொது இடங்களுக்குச் சென்று கைகுலுக்கி கொரோனாவை பரப்பி உலகைக் கொண்டு வருவோம்’ என்றும் ஆபத்தான பிரச்சாரம் ஒன்றை செய்துள்ளார்

இந்த ட்விட்டின் ஸ்க்ரீன்ஷாட் தற்போது டுவிட்டரில் மிக வேகமாக வைரலாகி அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த பெங்களூர் காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை கைது செய்துள்ளதாகவும், அந்த நபர் பணிபுரிந்து கொண்டிருந்த ஐடி நிறுவனம், அவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

ஒரு பக்கம் கொரோனா வைரஸை தடுக்க அரசு கடுமையாக போராடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் இதுபோன்ற கொரோனா வைரசை விட ஆபத்தான நபர்கள் இருப்பது துரதிருஷ்டமானது என்று கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது