ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பித்த என்ஜினீயர்: ரூ.1 லட்சத்தை இழந்த பரிதாபம்
- IndiaGlitz, [Wednesday,December 11 2019]
பெங்களூரில் உள்ள என்ஜினீயர் ஒருவர் ஆன்லைனில் தனது லைசென்சை புதுப்பிக்க முயற்சித்த போது சுமார் ஒரு லட்ச ரூபாயை இழந்த திடுக்கிடும் சம்பவம் குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் கடந்த 26ஆம் தேதி தனது டிரைவிங் லைசென்சை ஆன்லைனில் புதுப்பிக்க முயற்சித்தார். அப்போது அவர் கூகுளில் சென்று பெங்களூர் ஆர்டிஓ அலுவலகத்தில் இணையத்தை தேடி அதில் ஹெல்ப்லைன் நம்பர் ஒன்றை கண்டுபிடித்து அந்த நம்பருக்கு அவர் கால் செய்தார்.
அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட ஒருவர் ஆன்லைனில் அவருடைய லைசென்ஸை புதுப்பிக்க தான் உதவுவதாகவும் தான் கூறியபடி செய்யும் படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை அடுத்து அவருக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளதாகவும் அந்த எஸ்எம்எஸ்-இல் உள்ள ஒன் டைம் பாஸ்வேர்டை பகிரும் படியும் அவர் கூறினார்.
ஒன் டைம் பாஸ்வேர்ரை யாரும் பகிரக் கூடாது என்று அடிக்கடி வங்கிகள் அறிவுறுத்திய நிலையில் அதுபற்றி சிறிதும் யோசிக்காமல் ஒன் டைம் பாஸ்வேர்டை தொலைபேசியில் எஞ்ஜினியர் பகிர்ந்ததை அடுத்து அவருடைய டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டுவிட்டதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் தன்னுடைய வேலை முடிந்து விட்டதாக எண்ணி நிம்மதியாக தூங்க சென்றார். மறுநாள் காலையில் அவன் எழுந்து பார்த்தபோது அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து சுமார் 90,000 ரூபாய் 4 வங்கி கணக்குகளுக்கு சென்றுள்ளது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸில் புகார் அளித்தபோது அவர் ஒன் டைம் பாஸ்வேர்டை பகிர்ந்ததால் தான் அவருடைய பணம் பறிபோனது தெரிய வந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.