கொரோனாவால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் குளியலறையில் விழுந்து மரணம்!
- IndiaGlitz, [Sunday,June 28 2020]
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துவிட்டது என்பது அதிர்ச்சிகரமான தகவலாக உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது வீட்டின் குளியல் அறையில் திடீரென மயக்கம் போட்டு விழுந்து பலியாகியுள்ளதாகவும் இறப்புக்கு பின் செய்த சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் உள்ள ஃவைட்பீல்ட் என்ற காவல் நிலையத்தைச் சேர்ந்த 55 வயது உதவி சப்-இன்ஸ்பெக்டர் அவருடைய இல்லத்தில் குளியல் அறையில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மறைந்த சப் இன்ஸ்பெக்டரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தனக்கு கொரோனா இருப்பது தெரியாமலேயே சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து உள்ளார் என்பதும் இறப்புக்கு பின்னரே அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்நாடக மாநில போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.