பலூன் - காமெடி காற்றால் மிதக்கிறது
ஜெய் சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு சுற்றிக்கொண்டிருப்பவர் வீட்டில் அவர் அண்ணன் சுப்பு பஞ்சு அவரை மதிக்காவிட்டாலும் ஜெய்யின் மனைவி அஞ்சலி அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் ஜெய்யின் சர்ச்சைக்குரிய கதையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒரு பேய் கதையோடு வந்தால் படம் பண்ணலாம் என்று சொல்கிறார். முக நூலில் ஒரு பதிவில் ஊட்டியில் ஒரு பேய் வீடு இருப்பதை பார்த்து விட்டு அங்கு சென்று கதை தயார் செய்ய மனைவி அஞ்சலி அண்ணன் மகன் பப்பு மற்றும் உதவி இயக்குனர்கள் யோகி பாபு மற்றும் கார்த்திக் யோகி ஆகியோருடன் சென்று ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார். சிறுவன் பப்பு விளையாடி கொண்டிருக்கும்போது பந்து ஒரு கிணற்றில் விழுந்து விட அதை எடுக்கும் போது அங்கிருக்கும் ஒரு பொம்மையையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வர ஒரு சிறுமியின் ஆவி வீட்டுக்குள் வந்து களேபரம் செய்கிறது. யாரந்த ஆவி ஜெய் குடும்பத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என்பதை சொல்லுகிறது மீதி திரைக்கதை.
பக்கத்துக்கு வீடு பையன் தோற்றம் மற்றும் இயல்பான நடிப்பு என்று ஜெய் வழக்கம்போல் குறை சொல்ல முடியாத அளவுக்கு தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அவர் போடும் அந்த கோமாளி வேஷத்தில் கொஞ்சம் திகில் கொஞ்சம் பரிதாபம் என்று கலந்து அடிக்கிறார். பலூன் வியாபாரி சார்லியாக வரும் இன்னொரு கதாபாத்திரத்தில் விஷேஷம் பெருசாக இல்லை. கணவனுக்கு உறுதுணையாக இருக்கும் காதல் மனைவி வேடத்தில் அஞ்சலி கச்சிதம் பேய் கலாட்டாவில் பயப்படுவது பின் தானே பேய் பிடித்தவராக மாறுவது என்று எதிலும் மிகை இல்லாமல் நடித்து தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். படத்தை மிக பெரும் அளவில் காப்பாற்றுவது யோகி பாபு தான். கிட்ட தட்ட அவர் பேச வாய் திறக்கும் எல்லா காட்சிகளிலுமே ஒரு ஜோக்கை அள்ளி வீசுகிறார். ஜெய் அஞ்சலி உட்பட படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் ஒரு கவுண்டராவது கொடுத்து கலகலப்பூட்டுகிறார். சிறுவன் பப்புவிடம் யோகிபாபு படும் அல்லல் அல்லோலப்படுத்துகிறது. சிறுவனாக வரும் பப்பு சபாஷ் சொல்ல வைக்கும் துறுதுறுப்பு , யோகி பாபுவை கலாய்ப்பதும் பின் பேய் பிடித்த பிறகு அகோரமாகி நடிப்பதிலும் வெகுவாக கவர்கிறார் அந்த சிறுவன். திறமையான நடிகை ஜனனி ஐயரை ஒரு உப்பு சப்பில்லாத கதாப்பாத்திரத்தில் பார்ப்பத்தற்கு பாவமாக இருக்கிறது அறம் ராம் மற்றும் நாகநீடும் படத்தில் வந்து போகிறார்கள்.
படத்தின் முதல் பாதி கலகலப்பு பாதி த்ரில் மீதி என்று சிறப்பாகவே உள்ளது. இடைவேளைக்கு முன் வரும் காட்சிகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. ஜாதி கட்சி தலைவர்கள் எப்படி படைப்பாளிகளை மிரட்டி பணம் பிடுங்குகிறார்கள் என்பதை தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் கடைசியில் ஒரு ஜாதி கட்சி ஆளை பேய் வைத்தும் மிரட்டுகிறார். ஒரு வேலை ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாரோ.
பலூனில் இருக்கும் காற்றை பிடுங்கி விடுவது இடைவேளைக்கப்புறம் முன் பாதியின் பரபரப்பு இல்லாததும் ஒரு அரத பழசான பிளாஷ் பாக்கும் தான். பேய் வருவதற்கு முன்பாக இருந்த ஆவல் அதற்கு பிறகு சலிப்படைய செய்வதும் மைனஸ். இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்பாக இறந்த ஜெய்க்கும் இந்நாள் ஜெய்க்கும் டைரக்டர் போட முயற்சிக்கும் முடிச்சி காதுல. காமடி பேய் கதைகளோடு பூர்வ ஜென்மம் ஜாதி அரசியல் மற்றும் பழிவாங்கும் படலம் என்று கதை செய்ததில் கலவை கெட்டு விடுகிறது. படத்துக்குள் ஒரு படம் என்று சொல்லி சமாளித்தாலும் ஓட்ட மறுக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா வின் பின்னணி இசை வழக்கம் போல படத்துக்கு பெரிய பலம் பாடல்கள்தான் மனதில் பதிய வில்லை. ஆர் சரவணனின் ஒளிப்பதிவு மற்றும் ரூபனின் படத்தொகுப்பு சிறப்பு. கலை இயக்குனர் பங்கையும் குறிப்பிடவேண்டும். எழுதி இயக்கியிருக்கும் சைனீஷ் படம் ஆரம்பிக்கும்போதே எந்த எந்த ஹாலிவுட் படங்களின் பாதிப்பில் இந்த படம் செய்தார் என்று போட்டு காட்டியது பாராட்டுக்குரியது என்றாலும் முதல் பாதியில் மட்டுமே ஜெயிக்கிறார். பின் பாதியில் பேய்களுக்கே புளித்துப்போன ஒரு பழைய மாவை அரைத்து மிக சாதாரணமாக ஒரு கிளைமாக்சில் முடிக்கிறார்.
யோகி பாபுவின் காமடிக்காகவும் சில திகில் காட்சிகளுக்காகவும் இந்த பலூனை ஒரு தடவை நிச்சயம் பார்க்கலாம்
Comments