சிறிய வயதிலேயே வழுக்கையா? எளிமையான தீர்வு!

  • IndiaGlitz, [Friday,October 22 2021]

 

முந்தைய தலைமுறையில் 50 அல்லது 60 வயதில் உள்ள ஆண்கள் சிலருக்கு வழுக்கை ஏற்படுவது சகஜமாக இருந்தது. ஆனால் தற்போது 20 அல்லது 30 வயதில் உள்ள ஆண்களுக்கே தலைமுடி உதிர்ந்து வழுக்கை வந்துவிடுகிறது. சில பெண்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கின்றன.

தலைமுடிவு உதிர்வுக்குப் பெரும்பலான மருத்துவர்கள் வாழ்க்கை முறையைத்தான் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் வாழ்க்கை முறையைத் தவிர சில அடிப்படையான விஷயங்களும் இதற்குக் காரணம் என்றும், அவற்றை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் ஆலோசனைக் கூறுகின்றனர்.

தலைமுடிவு உதிர்வுக்கு காரணம்

இன்றைய இளைஞர்கள் பேக் செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். இதில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் என்பதை பலரும் உணரத் தவறிவிடுகிறோம். இதுபோன்று அதிக கிளைசெமிக் கொண்ட உணவுகளைச் சாப்பிடும்போது இன்சுலின் அளவுகளில் சீரற்ற தன்மை ஏற்படுகிறது. அதனால் முடிவு உதிர்தல் அதிகரிக்கும்.

முடி உதிர்வுக்கு இன்னொரு முக்கியமான காரணம். வைட்டமின் குறைபாடு. சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ளாத பலருக்கும் இந்தக் குறைபாடு இருக்கத்தான் செய்கிறது. அந்த அடிப்படையில் வைட்டமின் குறைபாடு உடையவர்களுக்கும் முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது.

வியர்வையே வெளிவராத இன்றைய வாழ்க்கை முறையில் பல இளைஞர்களுக்கு சிறு வயதிலேயே தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. இதுபோன்ற தைராய்டு கோளாறுகளும் முடிஉதிர்வுக்கு முக்கியமான காரணமாக அமைந்துவிடுகிறது.

நவீன வாழ்க்கை முறையில் சிலர் செயற்கையாக உருவாக்கப்படும் புரோட்டீன் பவுடர்களை சாப்பிடுகின்றனர். இதுபோன்ற புரோட்டீன் பவுடர்களும் முடி உதிர்வுக்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.

வழுக்கையை தெரிந்து கொள்வது எப்படி?

தலைவாரும்போது தினம்தோறும் ஏற்படும் முடி உதிர்வை பார்த்து ஒருசிலருக்கு பயம் ஏற்படுகிறது. உண்மையில் 50 முதல் 80 முடிகள் வரை ஒரு நாளைக்கு உதிர்ந்தால் அது இயல்பானது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த முடிகள் சுழற்சி முறையில் மீண்டும் முளைத்துவிடும் .

ஆனால் உதிர்ந்த முடிகள் மீண்டும் முளைப்பதற்கு சுகாதாரமான வாழ்க்கை முறை, சத்தான உணவு போன்றவை அவசியம் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நபருக்கு தினம்தோறும் 100 க்கும் மேற்பட்ட முடிகள் உதிர்ந்தால் அது சிக்கலான விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஆரம்பிக்கும் முடி உதிர்வு கடைசியில் வழுக்கையில் முடிந்து விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த நபர் தனக்கு எதனால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்பதை பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொண்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வதே நல்லது.

ஒருசிலருக்கு டைபாய்ட், ஜாண்டிஸ் போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் முடி உதிர்வு ஏற்படும். அதுவும் நோய் சரியாகி கிட்டத்தட்ட 2 மாதங்கள் வரை முடி உதிர்வு ஏற்படும். இப்படி உதிர்கின்ற முடி விரைவில் மீண்டும் முளைத்துவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எளிமையான டிப்ஸ்

முடி உதிர்வுக்கு மனஅழுத்தம், அதிக சூடு, பொடுகு போன்றவையும் காரணம் என்பதை பலமுறை கேட்டிருப்பீர்கள். இதுபோன்ற சிக்கலை எளிமையான வீட்டு மருத்துவத்தில் சரிசெய்து கொள்ளலாம்.

அதேபோல தேங்காய் எண்ணெய், ஆலீவ் எண்ணெய், நல்லெண்ணெய் என தலைக்கு எதை பயன்படுத்தினாலும் அதை மிதமாகச் சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்வதுபோல தினமும் பயன்படுத்துவது நல்லது. இதனால் ரத்தஓட்டம் சீராகும்.

மேலும் முடிவளர்ச்சிக்கு வில்வ இலை பொடி, எலுமிச்சை தோல் காயவைத்த பொடி, முருங்கை இலை பொடி, வெட்டிவேர், கரிசலாங்கன்னி வேர், செம்பருத்தி போன்ற பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது இந்தப் பொருட்களின் கலவையை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதோடு கற்றாழையைச் சேர்த்து தலையில் ஒரு பேக் போல பூசிக்கொண்டு பின்னர் குளிக்கலாம். இதனால் முடி உதிர்வு குறைந்து முடி வளர்ச்சி அதிகமாகும்.