பாலகுமாரனுக்கு சினிமா மீது காதல் இருந்தது: நடிகர் சிவகுமார்

  • IndiaGlitz, [Wednesday,May 16 2018]

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் நேற்று சென்னையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது உடல் மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் பலர் பாலகுமாரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாலகுமாரனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்று தான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள் வேதனைகள். சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தை தந்துள்ளது என்பதை தெளிவாக எழுதக்கூடியவர் பால குமாரன். 150 நாவல்கள் எழுதுவது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. சினிமா மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு காதல் இருந்தது.

பாலகுமாரன் எழுத்துக்களுக்கு விகடன் மற்றும் கல்கி போன்ற பத்திரிகைகள் மிகப்பெரிய உதவியாக இருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஒரு தொடரையும் பிரபல பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ளார். கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய நாயகன் மற்றும் குணா படங்களுக்கு இவர் தான் திரைக்கதை வசனம். காதலன் , ஜென்டில்மேன் , ஜீன்ஸ் போன்ற பெரிய அளவில் ஓடிய படங்களுக்கு இவர் தன்னுடைய எழுத்துக்களை அர்பணித்துள்ளார்.
பாலகுமாரனுக்கு 45 வயதில் தான் ஆன்மிக ஆர்வம் வந்தது. அப்போது திருவண்ணாமலைக்கு செல்ல ஆரம்பித்த அவர் அதன் பின்னர் ஆன்மீகத்திலேயே பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர் பட்டினத்தார் பாடல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஆன்மீக நூல் ஒன்றை எழுதியுள்ளார். என்னை பொறுத்த வரை பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு மனைவி உண்டு , காதல் மனைவி உண்டு. சூர்யா மற்றும் கௌரி என்று இரு குழந்தையும் உண்டு. அவரை முழுமையாக வாழ்ந்த மனிதராக தான் நான் பார்க்கிறேன்.

சித்தர்களின் வார்த்தைகள் படி ஆன்மா மட்டுமே நிரந்தரம். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்

இவ்வாறு நடிகர் சிவகுமார் கூறினர்.