குற்றப்பரம்பரை விவகாரம். பாரதிராஜாவுக்கு பாலா விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,April 09 2016]

பாரதிராஜாவின் கனவு திரைப்படம் என்று கூறப்படும் 'குற்றப்பரம்பரை' படத்தின் பூஜை சமீபத்தில் உசிலம்பட்டி அருகே பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பை பாரதிராஜா விரைவில் தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த படத்தின் கதையை இயக்குனர் பாலாவும் திரைப்படமாக எடுக்கவுள்ளதாகவும், அதற்கு பாரதிராஜா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதுகுறித்து இயக்குனர் பாலா தற்போது விளக்கம் அளித்துள்ளார். 'குற்றப்பரம்பரை' என்பது ஒரு கதை அல்ல. அது ஒரு வரலாற்று சம்பவம். ஒரு வரலாற்று சம்பவத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நான் மட்டுமே படமெடுப்பேன் என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதேபோல் 'மருதநாயகம்' கதையை கமல் சார் மட்டுமே படமெடுப்பேன் என்று கூற முடியாது. ஒரு உண்மை சம்பவத்தை உலகில் யார் வேண்டுமானாலும் அவர்களுடைய பாணியில் படமெடுக்கலாம்.
அதே நேரத்தில் பாரதிராஜாவுக்கு ஒரு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். நான் இயக்கபோகும் படம் 'குற்றப்பரம்பரை' படம் கிடையாது. வேலராமமூர்த்தி எழுதிய 'கூட்டாஞ்சோறு' என்ற கதையின் ஒரு பகுதியைத்தான் நான் படமெடுக்கின்றேன். இது குற்றப்பரம்பரை சம்பவம் நடந்த காலத்தில் நடந்த வேறொரு கதை. எனவே இந்த விஷயத்தில் பாரதிராஜா, ரத்னகுமார் ஆகியோர் என்னுடைய பெயரை தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம்' என்று கூறியுள்ளார்.