பாலாவின் 25 ஆண்டு கலைப்பயண விழாவுடன் இன்னொரு விழா: சுரேஷ் காமாட்சி அறிவிப்பு..
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் பாலா கடந்த 1999 ஆம் ஆண்டு ’சேது’ என்ற படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை அடுத்து பாலாவின் 25 ஆண்டுகால திரை உலக நினைவுகளை கொண்டாடும் வகையில் விழா எடுக்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டமிட்டுள்ள நிலையில் இந்த விழாவுடன் அவர் இயக்கிய ’வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது”
இயக்குநர் பாலாவின் 25ஆம் ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கலையுலகம் உறவுகளாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட்டுமல்ல, மகத்தான திறமையாளர்களை உறவுகளாக இணைத்துக் கொண்டு இயங்கும் ஒரு குடும்பம்.
அனைவரின் சுக துக்கங்களிலும், பாராட்டுதலிலும், தோள் கொடுத்தலிலும், துணை இருத்தலிலும் இச்சிறு உலகம் தன்னைத்தானே செழுமைப்படுத்திக் கொள்கிறது.
அன்பினால் ஆகாதது உலகத்தில் என்ன இருக்கிறது? பேரன்பு மட்டுமே உலகத்தை இயக்கும் விசை. சினிமா ஒரு பேரன்பு கொண்ட பெரும் ஆலமரம். அம்மரத்தின் விழுதுகளில் ஒரு விழுது தான் இயக்குநர் பாலா.
பலமான அந்த விழுது அம்மரத்தை உறுதியாகத் தாங்கியிருக்கிறது தனது பங்களிப்பின் மூலம்.
அப்படியான பங்களிப்பின் மூலம் நிறைய நாயகர்களை, கலைஞர்களை தனது இருபத்தைந்து ஆண்டு காலத்தில் உருவாக்கி உள்ளார் இயக்குநர் பாலா.
அதுவரை திறமை இருந்தும் முகவரி கிடைக்காமல் தவித்தவர்களைத் தேடி எடுத்து தன் படங்களையே அவர்களது முகவரியாக ஆக்கியவர் அவர்.
அவர் தன் கலை உளியால் துளித்துளியாக செதுக்கிய சிற்பங்கள் தான் தமிழ்த் திரை உலகம் என்கிற ராஜகோபுரத்தில் மின்னிக் கொண்டிருக்கின்றன.
பாலா என்ற தனிமனிதர் ரத்தமும் சதையுமாக உருவாக்கிய சிறிய படப்பட்டியலில் அவர் சாதித்திருப்பது நீண்ட வரிசை. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துப் போனவர்களில் அவரும் ஒருவர்.
எல்லோரும் ஒரு பாணியில் கடந்து பாதை அமைத்துக் கொண்டிருக்கும்போது, தனக்கென ஒரு பாணியை அழுத்தமாக அமைத்துக் கொண்டவர்.
மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள், உடலால்... உடல் புலன்களால் பாதிக்கப்பட்ட எளிய மனிதர்கள், புறக்கணிக்கப்பட்ட வாழ்வில் அன்பைத் தேடி அலைபவர்கள் என அதுவரை பேசப்படாத, பாலா உருவாக்கிய செல்லுலாய்டு மனிதர்கள் காலம் காலமாய் தமிழ்த் திரையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
அவர்களின் கடின வாழ்வைத் தன் அகத்தின் மூலம் பார்த்து பதிவு செய்த பாலாவின் திரை மொழி மிக அசாத்தியமானது.
நாம் வாழும் காலத்தில் கலை ஆன்மா கொண்ட ஒரு மகத்தான மனிதனைக் கொண்டாடவும்... பெருமைகொள்ளச் செய்யவும் ஓடும் ஓட்டத்தில் நமக்கு நேரம் வாய்க்காமல் போயிருக்கிறது.
இன்னமும் அதைக் காலம் தாழ்த்திக் கொண்டே போகக் கூடாது. அவரது இருபத்தைந்தாம் ஆண்டை விமர்சையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்.
இயக்குநர் பாலா இயக்கி, அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் "வணங்கான்" படத்தின் ஆடியோ வெளியீட்டையும், இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக டிசம்பர் 18 ஆம் தேதி அன்று மாலை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடத்த உள்ளோம்.
இது பாலா என்கிற ஒரு தனிப்பட்ட இயக்குநருக்கான விழா மட்டுமல்ல. கால் நூற்றாண்டாக தமிழ்த் திரையை கலையம்சம் பொருந்திய தனது திரைக்காவியங்களால் நிறைத்த ஒரு மாமனிதனுக்கு நாம் செய்கிற மரியாதை.
திரையுலகின் ஆகச்சிறந்த ஆளுமைகளும் வாழ்த்த, இன்னும் பல ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் இயக்குநர் பாலா ஆரோக்கிய நடைபோட, நீங்களும் உடனிருந்து வாழ்த்த அழைக்கிறோம்.
தமிழ்த் திரையுலகின் அனைத்து நண்பர்களையும் ஒரே குடும்பமாய் நின்று வாழ்த்த வருகை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
09-12-2024
— sureshkamatchi (@sureshkamatchi) December 9, 2024
சென்னை
*இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா*
வணக்கம்!
கலையுலகம் உறவுகளாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட்டுமல்ல, மகத்தான திறமையாளர்களை உறவுகளாக இணைத்துக் கொண்டு… pic.twitter.com/Ud1IObSon6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout