பாஜிராவ் மஸ்தானி'. திரைவிமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சரித்திர படங்களின் மீது அனைவருக்கும் ஒரு ஆர்வம் வர காரணமாக இருந்த படம் 'பாகுபலி'. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் ரசிகர்களுக்கு சரித்திர படங்கள் மீது ஒரு மரியாதை தோன்றிய நிலையில் வந்துள்ள படம்தான் 'பாஜிராவ் மஸ்தானி. மேரிகோம் உள்பட பல தரமான படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கியுள்ள இந்த படம் ரிலீஸுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பாரப்பை பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்.
பிறப்பால் பிராமணராக இருந்தாலும் சத்ரியனுக்குரிய அத்தனை தேர்வுகளில் வெற்றி பெற்று மராத்திய அரசின் சேனாதிபதி ஆகிறார் பாஜிராவ் (ரன்வீர்சிங்). மராத்திய அரசை பாரதம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற கொள்கையுடன் ஒவ்வொரு நாடாக பிடித்து வரும் நிலையில் பண்டல்கட் என்ற மொகலாய நாட்டின் இளவரசி மஸ்தானி (தீபிகா படுகோனே) தங்கள் நாட்டை எதிரி நாட்டிடம் இருந்து காப்பாற்ற பாஜிராவிடம் உதவி கேட்கிறார். முதலில் மறுக்கும் பாஜிராவ் பின்னர் மஸ்தானியின் வேண்டுகோளை ஏற்று எதிரிகளிடம் இருந்து பண்டல்கட் நாட்டை காப்பாற்றுகிறார். போரின்போது ஒரு கட்டத்தில் பாஜிராவின் உயிரை மஸ்தானி காப்பாற்றுகிறார். இதனால் இருவருக்கும் இடையே காதல் பிறக்கின்றது
ஏற்கனவே காசியாப் (ப்ரியங்கா சோப்ரா) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள பாஜிராவ், பின்னர் மஸ்தானி காதலின் ஆழத்தை புரிந்து கொண்டு இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொள்கிறார். தன்னை தவிர தனது கணவர் வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் என நம்பிக்கையுடன் இருந்த காசியாப்புக்கு இது அதிர்ச்சியை தருகிறது. மேலும் பாஜிராவின் ஆச்சார்யமான குடும்பம் மஸ்தானியை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. ஒரு இந்து குடும்பத்திற்கு முஸ்லீம் மனைவியா? என்று பாஜிராவை எச்சரிக்கும் குடும்பத்தினர் மஸ்தானியின் உறவை துண்டித்துவிடும்படி கட்டாயப்படுத்துகின்றனர். மஸ்தானியை பாஜிரா பிரிந்தாரா? குடும்பத்தினர்களின் எதிர்ப்பை சமாளித்தாரா? பாஜிராவின் மனைவி மஸ்தானியை ஏற்றுக்கொண்டாரா? போன்ற கேள்விகளுக்கான விடைகள்தான் மீதிக்கதை.
ரன்வீர்சிங், தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா ஆகிய மூவரை நோக்கித்தான் கதை சுற்றி சுற்றி வருகிறது. மூவரில் யார் நன்றாக நடித்துள்ளார்கள் என்று எந்த தராசிலும் எடை போட முடியாது. அவரவர் கேரக்டரில் தங்களுடைய அதிகபட்ச உழைப்பை மூவரும் கொடுத்துள்ளனர்.
ரன்வீர்சிங் போரில் காட்டும் வீரம், மஸ்தானி தன்மீது காதல் கொண்டுள்ளார் என்று தெரிந்ததும் அவரை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா? என்ற மனப்போராட்டம், தீபிகாவை ஏற்றுக்கொண்ட பின்னர் அதை மனைவியிடம் மறைக்க விரும்பாமல் ,அதே நேரத்தில் ப்ரியங்காவை சமாதானப்படுத்த முடியாமல் படும் திண்டாட்டம், அம்மாவின் கோபத்திற்கு ஆளாகி தவிப்பது என எந்த குறையும் இவர் நடிப்பில் வைக்கவில்லை.
தீபிகா படுகோனேவுக்கு முதல் கால்மணி நேரம் போர் வீராங்கனையாகவும், போர் முடிந்த பின்னர் ரன்வீரிடம் மனதை பறிகொடுத்த பின்னர் ரன்வீர் குடும்பம் செய்யும் அவமானங்களை தாங்கிக்கொள்வது என படம் முழுவதும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக தன்னை கொள்ள வரும் எதிரிகளை கையில் குழந்தையோடு அவர் போடும் வாள்சண்டை சான்ஸே இல்லை.
தீபிகாவின் கேரக்டருக்கு எந்த வகையில் குறைவில்லாத கேரக்டர் ப்ரியங்கா சோப்ராவிற்கு. தனது வாழ்க்கையை இன்னொரு பெண் பகிர்ந்து கொண்டாள் என்று அறிந்தவுடன் மனதுக்குள் துடிப்பது, அதே நேரத்தில் அந்த துடிப்பை கணவர் முன் காட்டிக்கொள்ளாமல் சிரிக்க முயல்வது, என நடிப்பில் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளார்.
படத்தின் பெரிய பலம். தொய்வில்லாத திரைக்கதை. கதை எந்த இடத்திலும் தடுமாறவில்லை. தேவையில்லாத காட்சிகள் என்று ஒரு காட்சியையும் குறிப்பிட முடியாது. ஆனால் இத்தனை பாடல்கள் இந்த படத்திற்கு தேவையா? என்பதை மட்டும் கேட்காமல் இருக்க முடியாது. அட்லீஸ்ட் தமிழில் மட்டுமாவது பாடல்களை கட் செய்திருக்கலாம்
தீபிகாவும் ப்ரியாங்காவும் சந்திக்கும் காட்சிகளில் அரச பரம்பரைகளின் சக்களத்தி சண்டையை டீசண்டாக படமாக்கியுள்ள இயக்குனருக்கு ஒரு சபாஷ். அதே நேரத்தில் தீபிகாவுக்கும் ப்ரியங்காவுக்கும் ஒரே நாளில்தான் குழந்தை பிறக்கின்றது. ஆனால் ப்ரியங்காவின் மகன் மட்டும் வாலிபராகவும், தீபிகாவின் மகன் சிறுவனாகவும் இருப்பது எப்படி? என்பது மட்டும் புரியாத புதிர்.
பாடல்கள் அனைத்திலுமே இந்தி வாடை அடிப்பதால் நம்மால் ரசிக்க முடியவில்லை .தீபிகாவும் ப்ரியங்காவும் ஆடும் நடனப்பாட்டு மட்டும் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசையில் அப்படி ஒரு உலகத்தரம். இசையமைப்பாளர் சஞ்சித் பால்ராவுக்கு ஒரு பாராட்டு
பெரிய பெரிய மாளிகைகள், போர்க்காட்சிகள் என காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக உள்ளது. ஆனாலும் பாகுபலி படத்தில் இருந்த கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தரம் மட்டும் இந்த படத்தில் மிஸ்ஸிங்.
"கடவுளால் முடியாதது கூட காதலால் முடியும்
சிறுத்தையும் வேகத்தையும் பருந்தின் பார்வையையும், பாஜிராவின் வீரத்தையும் சந்தேகம் கொள்ள வேண்டாம்
காட்டில் பெண் சிங்கம் தன் குழந்தையை பெற்றெடுக்கும்போது அதனருகில் எந்த தாதியும் இருப்பதில்லை
மாம்பழம் பெயருக்குத்தான் பழங்களின் ராஜா. ஆனால் அதுதான் அதிகம் கல்லடி படுகின்றது.
நீங்கள் யாருக்கு மனைவியோ அவர் எனக்கும் கணவர்தான்"
போன்ற பல வசனங்கள் சரியான இடத்தில் இடம்பெற்றுள்ளது படத்திற்கு அமைந்த ஒரு மிகப்பெரிய பலம்.
எல்லா மதமும் அன்பை போதிக்கின்றது. ஆனால் எந்த மதமும் அன்பை பின்பற்றுவதில்லை. என்ற கருத்தை ஒரு அழகான காதல் கதையில் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர். கொஞ்சம் பிசகினாலும் இந்து-முஸ்லீம் பிரச்சனையாக மாறிவிடும் அபாயத்தை உணர்ந்து மிகவும் ஜாக்கிரதையான காட்சிகளை வைத்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள்
மொத்தத்தில் 'பாஜிராவ் மஸ்தானி' ஒரு அழகான காதல் கவிதை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments