'பாகுபலி' படத்தில் பணியாற்றியவரின் உயிரை காப்பாற்ற எஸ்.எஸ்.ராஜமெளலி வேண்டுகோள்!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ திரைப்படத்தில் பணியாற்றிய ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

’பாகுபலி’ படத்தில் புரோடக்சன் ஒருங்கிணைப்பாளராக பணி செய்தவர் தேவிகா. இவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு சுமார் மூன்று கோடி ரூபாய் தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தேவிகா தனக்கு நிதி உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வேண்டுகோளை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள எஸ்எஸ் ராஜமெளலி, ‘பாகுபலி’ திரைப்படத்தின் போது தேவிகா என்னுடன் இணைந்து பணியாற்றினார் என்றும், பல போஸ்ட் புரடொக்சன் பணிகளுக்கு அவர் ஒருங்கிணைப்பாளராக இருந்தார் என்றும், அவருடைய ஆர்வமும் அர்ப்பணிப்பும் நிகரற்றது என்றும், துரதிஷ்டவசமாக அவர் தற்போது ரத்த புற்று நோயுடன் போராடி வருகிறார் என்றும், அவருக்கு நிதி உதவி செய்து அவருடைய உயிரை காப்பாற்றுமாறு வேண்டிக் கொள்கிறேன்’ என்றும் தனது சமூக வலைத்தளத்தில் எஸ்.எஸ். ராஜமெளலி தெரிவித்துள்ளார்.