இந்தியாவுக்கு 17வது பதக்கம்: பேட்மிண்டனில் அசத்திய இந்திய வீரர்!

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இன்று காலை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்களையும் இந்திய வீரர்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இந்தியா பதக்கப் பட்டியலில் 16 பதக்கங்கள் பெற்று இருந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இந்தியாவுக்கு 17வது பதக்கம் கிடைத்துள்ளது. சற்றுமுன் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்

இன்று காலை மனோஜ் சர்கார் அரையிறுதியில் பிரிட்டன் வீரர் டேனியலிடம் 8-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்த நிலையில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் அவர் ஜப்பான் வீரர் ஃபூஜிஹாராவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் சுற்றில் 22 - 20 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற மனோஜ் சர்க்கார், 2-வது சுற்றில் 21 - 13 என்ற புள்ளி கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதனையடுத்து இந்தியா, பாரா ஒலிம்பிக்கில் 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது என்பதும் பதக்க பட்டியலில் 25வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.