'வாலு' படத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை. ஜூலை 17-ல் ரீலீஸ் ஆவதில் சிக்கல்?
- IndiaGlitz, [Tuesday,July 14 2015]
சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தடை செய்ய வேண்டும் என விநியோகிஸ்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையில், இன்று சென்னை நீதிமன்றம் இந்த படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் 'வாலு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்த 'வாலு' படத்தின் வெளியீட்டிற்கு தடைக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில் "தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு 10 கோடி ரூபாய்க்கு கடந்த 2013ஆம் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். எனவே என்னைத் தவிர வேறு நபர் மூலமாக 'வாலு' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று மேஜிக் ரேஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வழக்கை மேஜிக் ரேய்ஸ் சார்பாக வழக்கறிஞர் என். ரமேஷ் வாதாடினார்.
தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்ரவர்த்தி தரப்பில் இருந்து மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நேற்றைய விசாரணையின்போது, தன்னையும் மூன்றாவது மனு தாரராக சேர்க்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் தரப்பில் கோரப்பட்டது. எனவே இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மேஜிக் ரேஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி. இருதரப்பு வாதங்களையும் கேட்டு, 'வாலு' படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும், மூன்றாவது மனுதாரராக தன்னை சேர்க்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவால் 'வாலு' படத்தின் ரிலீஸூக்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.