'தெறி' - 'விஜய் 60'. ஒரு அபூர்வ ஒற்றுமை

  • IndiaGlitz, [Monday,July 04 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி உலகெங்கும் சூப்பர் ஹிட் ஆனது. ரூ.150 கோடி வசூல் செய்து விஜய் படங்களில் அதிகவசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் மீனா மகள் நைனிகா. விஜய்-நைனிகா காட்சிகள் இன்னும் கொஞ்சம் வராதா? என்று அனைவரையும் ஏங்க வைத்தது என்றால் அது மிகையில்லை. மேலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 'தெறி' படத்தின் வெற்றிக்கு நைனிகாவின் கதாபாத்திரமும் மிக முக்கிய காரணம்.
இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்திலும் ஒரு குழந்தை நட்சத்திரம் இணைந்துள்ளது. மோனிகாசிவா என்ற இந்த குழந்தை நட்சத்திரம் ஏற்கனவே 'சங்குசக்கரம்' என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சிபிராஜின் 'கட்டப்பாவை காணோம்' படத்திலும் நடித்து வருகிறார்.
'தெறி'யில் விஜய்-நைனிகா காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றதைபோல, இந்த படத்திலும் விஜய்-மோனிகாசிவா காட்சிகளை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.