4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை.. அதிசயத்தை பார்க்க குவியும் கூட்டம்!

  • IndiaGlitz, [Friday,December 16 2022]

மத்திய பிரதேச மாநிலத்தில் நான்கு கால்களுடன் கூடிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளததை அடுத்து அந்த குழந்தையை காண்பதற்காக மருத்துவமனையை நோக்கி கூட்டம் குவிந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மிகவும் அரிதாக இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு பதிலாக சற்று தவறி நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறப்பது என்பது அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒரு நிகழ்வாகும்.

அந்தவகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்த்ததும் மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரும் வியப்படைந்தனர். அந்த குழந்தைக்கு நான்கு கால்கள் இருந்ததாகவும் இதுபோன்ற ஆச்சரியங்கள் மிக அரிதாக நிகழும் என்றும் பிரசவம் பார்த்த டாக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தாயின் கருவில் குழந்தை வளரும் போது இரட்டை குழந்தைகள் சில சமயம் உருமாறி ஒரே குழந்தையாக நான்கு கால்களுடன் பிறக்கும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த குழந்தையின் இரண்டு கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என்றும் குழந்தைகள் நலத் துறையின் நிபுணர்கள் விசாரணை அறிக்கை வந்த பிறகே அறுவை சிகிச்சை முடிவு எடுக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு கால்களை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டால் அந்த குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.