'ஜீவி' கதாசிரியர் இயக்கும் முதல் படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,September 03 2019]

வெற்றி நடிப்பில் கோபிநாத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஜீவி'. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பாபு தமிழ் என்பவர் தற்போது இயக்குனராக உள்ளார். இவர் இயக்கும் முதல் படத்திற்கு 'க்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

'க்' படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் யோகேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். சைக்காலாஜிக்கல் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படம் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்டது என்று நேற்று வெளியாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. ஏற்கனவே விஜய் நடித்த 'பிகில்' திரைப்படமும் கால்பந்து விளையாட்டு குறித்த் திரைப்படம் என்பது தெரிந்ததே.

தர்மராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.