அனைவரும் விடுதலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 28 ஆண்டுகாலமாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்படும் என்று கூறப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கோவையில் பேருந்து நிலையம் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் அவர்களை தவிர 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள் என்றும் செய்திகள் வெளியானது. மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகாத 6 பேரும் காணொளி மூலம் ஆஜரானார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த வழக்கில் 2000 பக்க தீர்ப்பை நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் அவர்கள் சற்று முன்னர் வாசிக்கத் தொடங்கினார். இந்த தீர்ப்பின் படி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆதாரங்கள், சாட்சிகள் திடமாக இல்லை என்றும், பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட ஒன்றல்ல என்றும் திடீரென நடைபெற்றது என்றும் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.