7 நாட்களில் கொரோனா பறந்துவிடும்: பாபா ராம்தேவின் புதிய ஆயுர்வேதிக் மருந்து!!!

  • IndiaGlitz, [Tuesday,June 23 2020]

 

கொரோனா தடுப்பூசி மட்டுமல்ல கொரோனா சிகிச்சைக்கே இறுதியான மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படாமல் உலக மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நமது யோக குரு பாபா ராம்தேவ் கொரோனாவை 7 நாட்களில் குணப்படுத்தும் ஒரு ஆயுர்வேதிக் மருந்து ஒன்றை அறிமுகப் படுத்தி இருக்கிறார். இந்த மருந்து 100 விழுக்காடு முழுமையான குணத்தை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை உலகச் சுகாதார அமைப்பு கொரோனா சிகிச்சைக்கென்று இறுதியான மருந்து எதையும் பரிந்துரைக்கவில்லை. இந்நிலையில் 100 விழுக்காடு சிகிச்சையைத் தரும் மருந்து ஒன்றை ராம்தேவ்க்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸை குணப்படுத்த பதஞ்சலி நிறுவனம் கிட் வடிவிலான ஒரு மருந்தை தற்போது சந்தைக்கு கொண்டு வரவிருக்கிறது. அதன் பெயர் “கொரோனா ஆயுர்வேதிக் மருந்து கிட்“ என அழைக்கப்படுகிறது. NIMS பல்கலைக் கழகமும் பதஞ்சலி ஆராய்ச்சி மையமும் இணைந்து இந்த ஆயுர்வேத மருந்தை தயாரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களில் பல நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை செய்ததாகவும் பாபா ராம்தேவ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி 280 கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 100 விழுக்காடு முழுமையான சிகிச்சையைக் கொடுக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

NIMS பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆயுர்வேதிக் மருந்து சிகிச்சையில் 7 நாட்களின் முழுமையான சிகிச்சையை பெற முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பல்கலைக் கழகம் 95 கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் முதல் மூன்று நாட்கள் 69 சதவீதம் குணமடைந்ததாகவும் அடுத்த 4 நாட்களில் முழுமையான குணத்தை பெறமுடிந்ததாகவும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே இந்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனாவை குணப்படுத்தும் வகையிலா “ஆர்சனிக் ஆல்பம் 3 சி” என்ற ஹோமியோபதி மருந்து ஒன்றை வெளியிட்டு இருந்தனர். ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படாத ஒன்று என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

முன்னதாக மடகாஸ்கர் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் கொரோனாவுக்கு மூலிகை மருந்தை அறிமுகப் படுத்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தகவல் அளித்த உலகச் சுகாதார நிறுவனம் அதைப் பற்றிய எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா ஆயுர்வேதிக் கிட் என்ற மருந்தை அறிமுகப் படுத்தி இருக்கிறது. இதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்படாத ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.