'பாகுபலி' விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம், பிரமாண்டத்தின் உச்சம், எஸ்.எஸ்.ராஜமவுலியின் கனவுப்படம், என ரிலீஸுக்கு முன்னர் விமர்சிக்கப்பட்ட பாகுபலி, உண்மையிலேயே பிரமாண்டம்தானா, என்பதை தற்போது பார்ப்போம்.
கையில் குழந்தையுடன் அருவியின் பேரிறைச்சல் முன் முதுகில் அம்புடன் நிற்கும் ரம்யாகிருஷ்ணன் தோன்றும் முதல் காட்சியிலேயே ஆடியன்ஸ் சீட் நுனிக்கு சென்று விடுகின்றனர். அதன்பின்னர் தன்னுடைய உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றும் அளவுக்கு அந்த குழந்தை யார்? என்பதுதான் கதையின் சஸ்பென்ஸ். அருவியின் கீழே வாழும் ரோகிணியின் தம்பதியினர் அந்த குழந்தையை எடுத்து வளர்க்கின்றனர். அவர்களிடம் வளரும் பிரபாஸ், அருவியின் மீது ஏறி, அருவிக்கு அந்த பக்கம் என்ன இருக்கின்றது என்பதை அறிய பலமுறை முயற்சி செய்கிறார். முயற்சிகள் பல தோல்வி அடைந்த நிலையில், தேவதை வடிவில் தமன்னாவை பார்த்து அந்த தேவதையின் பின்னால் சென்று அருவியின் உச்சியை அடைகிறார். அங்கு சென்றவுடன் தான் தெரிகிறது, அங்கு ஒரு மிகப்பெரிய நகரமே இருக்கின்றது. அந்த நகரத்தில் கொடுங்கோல் அரசாட்சி செய்யும் ராணாவிடம் சிக்கி தவிக்கும் ராணி அனுஷ்காவை காப்பாற்ற போராடும் கூட்டத்துடன் இணையும் பிரபாஸ், ராணியை மீட்டாரா? என்பதுதான் கதை.
முதலில் எஸ்.எஸ்.ராஜமவுலி குறித்து பார்த்துவிடுவோம். பிரமாண்டம் என்ற வார்த்தையெல்லாம் இந்த படத்தை விமர்சனம் செய்ய கண்டிப்பாக போதாது. அதைவிட வேறு ஏதாவது வார்த்தை தமிழில் இருக்கின்றதா? என்று தேட வேண்டும். இதுவரை தமிழ் சினிமா எத்தனையோ சரித்திர படங்களை பார்த்துள்ளது. ஆனால் இந்த அளவுக்கு பிரமாண்டமாய், ஒரு காட்சியில் கூட போலித்தனம் தெரியாமல், ஹாலிவுட் படத்தை தமிழில் டப் செய்து பார்ப்பது போல் இருக்கின்றது. கடைசி அரை மணி நேர போர்க்காட்சிகளும், அதில் கையாளும் தந்திரங்களும், போர் முனையில் தோல்வியின் விளிம்பில் இருக்கும் நிலையில் பிரபாஸ் செய்யும் ஒரு செய்கையால் ஏற்படும் திருப்பமும், இதுவரை தமிழ் சினிமா என்ன? உலக சினிமாவே பார்த்திராத காட்சிகள். போரில் பிரபாஸின் படை எதிரிப்படையை நோக்கி முன்னேறி செல்லும்போது திடீரென எதிரிப்படையினர் மக்களை கேடயமாக வைத்து போரிடுகின்றனர். அப்போது பிரபாஸ், ராணா இருவரும் தனித்தனியே எடுக்கும் முடிவுகள் சூப்பரோ சூப்பர். நமக்கு தெரிந்து அந்த போர்க்காட்சிகள் இவ்வளவு பிரமிப்பாக ஹாலிவுட் படங்களில் கூட வந்திருக்குமா? என்பது சந்தேகம்தான்.
இருந்தாலும் படத்தின் கதையின் வேகத்தை குறைப்பது போல் உள்ள பாடல்கள், கொஞ்சம் மெதுவாக நகரும் முதல்பாதியின் திரைக்கதை ஆகியவைகளை எஸ்.எஸ்.ராஜமவுலி கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். பிரபாஸ்-தமன்னா டூயட் பாடலின்போது, தியேட்டரில் உள்ள பாதி ஆடியன்ஸ் எழுந்து வெளியே போய்விடுகின்றார்கள். இதுமாதிரியான படங்களில் டூயட் பாடல்கள் தேவைதானா? என்று இயக்குனர் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
கட்டுமஸ்தான் உடல், இளவரசருக்கே உள்ள கம்பீரம், தமன்னாவிடம் காதல், அன்னையை சங்கிலியால் பார்க்கும்போது வெகுண்டு எழும் காட்சிகள் ஆகியவைகளில் பிரபாஸ் நன்றாக நடித்துள்ளார். இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக கொஞ்சமே அறிமுகமாகியுள்ள பிரபாஸ், எந்த அளவுக்கு எடுபட போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த படத்தின் கதாநாயகி அனுஷ்கா என்று கூறப்பட்டாலும் இந்த முதல் பாகத்தை பொறுத்தவரை நாயகி கண்டிப்பாக தமன்னாதான். இதுவரை அழகு பதுமையாக நாம் பார்த்த தமன்னாவிடம் இவ்வளவு வீரம் எங்கே ஒளிந்திருந்தது. கண்களில் காட்டும் கோபம், வாள் வீச்சில் காட்டும் வேகம் ஆகியவை அனைத்துமே சூப்பர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனுஷ்காவிற்கு இந்த முதல் பாகத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். அந்தகுறையை இயக்குனர் இரண்டாம் பாகத்தில் நீக்குவார் என நம்புவோம். படத்தில் அனுஷ்கா வருவதே சில காட்சிகள்தான். அதிலும் பல நேரம் அவரை சங்கிலியால் கட்டிப்போட்டுள்ளார்கள். அனுஷ்காவை மட்டுமல்லா, அவர் நடிப்பையும் கட்டிப்போட்டதாகத்தான் எண்ண வேண்டியதுள்ளது.
எப்போதும் கண்களில் கோபத்தை காட்டும் வில்லன் கேரக்டரில் ராணா. போரில் எதிரிப்படை தலைவனை கொல்பவன் தான் அரசன் என ரம்யாகிருஷ்ணன் கட்டளையிட்டதும், பிரபாஸுக்கு முன் எதிரிப்படை தலைவனை கொல்ல காட்டும் வேகம், என அவருக்கு கொடுத்த கேரக்டரை சூப்பராக செய்துள்ளார்.
அரச குடும்பத்துக்கு விசுவாசமான அடிமையாக சத்யாராஜ், தன் மகனுக்கு எப்படியாவது அரசன் பட்டம் வாங்கித்தர வேண்டும் என்பதற்காக சூழ்ச்சிகள் செய்யும் நாசர், கேரக்டர்கள் படத்திற்கு பெரும் பலம்.
படையப்பா படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ள அழுத்தமான வேடம். ஒரு போரில் அதிக வீரனை கொல்பவன் வீரன் இல்லை. அந்த போரில் ஒருவன் எத்தனை மக்களை காப்பாற்றுகின்றானோ அவனே உண்மையில் வீரன், போன்ற வசனங்களை ரம்யா கிருஷ்ணன் உச்சரிக்கும்போதும், தன்னை பற்றி இழிவாக பேசிய எதிரிப்படை தலைவன் உயிரோடு இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அதற்கு அவர் கூறும் காரணத்தை கேட்கும்போது நிஜமாகவே மனம் பதறுகிறது.
மரகதமணியின் இசையில் பாடல்கள் சுமாராகத்தான் இருக்கின்றது. வார்த்தைகளும் சரியாக புரியவில்லை. ஆனால் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். குறிப்பாக போர்க்காட்சிகளின் அவர் போட்டுள்ள பின்னணி இசை ஹாலிவுட்டுக்கு இணையானது. வாழ்த்துக்கள். மதன்கார்க்கியின் கூர்மையான வசனங்கள் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.
இந்த படத்திற்கு எத்தனை கேமராக்கள் உபயோகித்திருப்பார்கள், எத்தனை உதவியாளர்கள் இருந்திருப்பார்கள் என்று யோசித்தால் தலை சுற்றும். அந்த அளவுக்கு ஒளிப்பதிவிலும் அவ்வளவு பிரமாண்டம். செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள்
எடிட்டர் முதல்பாதியில் இன்னும் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம். ஆனால் இரண்டாவது பாதியில் கச்சிதமான எடிட்டிங்.
மொத்தத்தில் இரண்டாம் பாதியின் போர்க்காட்சியில் காட்டிய பிரமாண்டத்தை முதல் பாதியிலும் காட்டியிருந்தால் முழு திருப்தியாக இருந்திருக்கும். கடைசி அரை மணி நேர போர்க்காட்சிகளுக்காக படம் பார்க்கலாம்.
மதிப்பெண்- 3.25/5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments