தமிழ் »
Cinema News »
பாகுபலி 2: ஒரு முன்னோட்டம். இந்தியாவின் பிரமாண்டமான படத்தை உற்சாகமாக வரவேற்போம்
பாகுபலி 2: ஒரு முன்னோட்டம். இந்தியாவின் பிரமாண்டமான படத்தை உற்சாகமாக வரவேற்போம்
Wednesday, April 26, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக அரங்கில் தென்னிந்திய சினிமாவின் தரத்தைப் பறைசாற்றி இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்த படம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி`. இந்தப் பிம்மாண்ட வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் 'பாகுபலி 2' இந்த வாரம் வெளியாகிறது.. ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட், அர்னால்ட், சில்வர்ஸ்டர் ஆகியோர்கள் படங்கள் ரூ.500 கோடி, ரூ.1000 கோடி வசூல் செய்தது என்பதை மட்டுமே படித்து வந்த நமது கண்களுக்கு ஒரு இந்திய படமும் ரூ.1000 கோடி வசூல் செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது, நமது நாட்டில் நல்ல கலைஞர்களும், திறமையான படைப்புகளும் உருவாக ஆரம்பித்துவிட்டன என்பதற்கு சான்றாக உள்ளது.
அமிதாப்பச்சன், ஷாருக்கான், அமீர்கான், ரஜினிகாந்த் போன்ற இந்திய அளவில் பிரபலம் இல்லாத நடிகர்கள் நடித்த `பாகுபலி` படத்தின் முதல் பாகம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தின் வெற்றியும், மலைக்க வைக்கும் வசூலும், சீனா, ஜப்பான் உள்பட உலகம் முழுவதும் கிடைத்த ஆதரவும்தான் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை மிகப்பிரமாண்டமாக தயாரிக்க படக்குழுவினர்களுக்கு ஒரு ஊக்கமாக அமைந்தது. கட்டப்பாவின் ரகசியத்தை தெரிந்து கொள்ள முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமே இந்த இரண்டாவது பாகத்தை பார்த்தாலே மிகப்பெரிய வெற்றி என்பது நிச்சயம்.
தஞ்சாவூர் கோவில் என்றாலே அனைவருக்கும் எப்படி ராஜராஜசோழன் ஞாபகம் வருமோ, அதை போல பாகுபலி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே பெயர் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஏற்கனவே தென்னிந்திய சினிமாவின் மிகப் பெரும் இயக்குனராக விளங்கிய ராஜமெளலி, பாகுபலி` படத்தின் மூலம், இந்தியாவின் முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைந்தது. 'பாகுபலி 2' படத்திற்கு பின்னர் உலகின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒருசில மாதங்களில் படத்தை முடித்துவிட்டு கல்லா கட்டி போகும் இயக்குனர்கள் மத்தியில் ஒரு படத்திற்காக நான்கு வருடங்களுக்கு மேல் தனது உழைப்பை கொட்டியுள்ள ராஜமெளலி அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். நூற்றுக்கணக்கான துணை நடிகர்களை வைத்துக்கொண்டு ஒரு போர்க்காட்சியை இயக்குவது என்பது சாதாரண காரியமில்லை. இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரிடமும் அவர்களின் சிறப்பான ஒட்டுமொத்த திறமையை வெளிக்கொண்டு வந்து ரசிகர்களின் கண்முன் நிறுத்திய ராஜமெளலிக்கு ஒரு சல்யூட்
அதேபோல் 'பாகுபலி' கதாபாத்திரத்தை நம் மனதில் ஆழ பதிய வைத்ததில் பிரபாஸின் கடின உழைப்புக்கும் நடிப்புக்கும் பெரும் பங்கு உண்டு . நான்கு வருடங்கள் ஒரு பிரபலமான ஹீரோ வேறு படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் ஒரே கேரக்டரில் தனது முழு கவனத்தையும் செலுத்தி சிறப்பான நடிப்பை கொடுத்ததன் மூலம் இந்திய சினிமா வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார் பிரபாஸ்.
மேலும் இந்த படத்தில் நடித்துள்ள ராணா, சத்யராஜ், நாசர், தமன்னா, அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன் உள்பட அனைவருமே தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மரகதமணி, பாடல்களும் பின்னணி இசையும் மனதை தொடும் வகையில் உள்ளன
இந்த படத்தின் முதுகெலும்பு என்று கிராபிக்ஸ் காட்சிகளைத்தான் கூற வேண்டும். குறிப்பாக முதல் பாகத்தின் போர்க்காட்சிகள் 'லார்ட் ஆப் தி ரிங்ஸ்' படத்திற்கு இணையாக இருந்ததாக விமர்சனம் பெற்ற நிலையில் கண்டிப்பாக இரண்டாம் பாகத்திலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் கமலக்கண்ணன் கலக்கியிருப்பார் என்றே எதிர்பார்க்கலாம். உலகம் முழுவதும் 33 ஸ்டூடியோக்களில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் இயக்குனரின் தந்தையும் இந்த படத்தின் கதாசிரியருமான விஜேந்திரபிரசாத் அவர்கள் இந்த படம் குறித்து கூறியபோது, ' நான் கே.பாலசந்தர், பாரதிராஜா போன்ற திரையுலக மேதைகளின் படங்களை பார்த்து திரையுலகில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றெண்ணிதான் திரையுலகத்திற்குள்ளே வந்தேன். இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சிறந்த ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார் மற்றும் இயக்குநர் ராஜமெளலி இவர்களுடன் நானும் பணியாற்றியிருப்பதை நினைத்தால் மிகப் பெரிய பெருமையாக இருக்கிறது. தமிழின் மிகப் பெரிய கவிஞரான வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கியின் வசனத்தை பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி' என்று கூறினார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டின்போது இந்த படத்தின் வசனகர்த்தாவும், பாடலாசிரியருமான மதன் கார்க்கி பேசும்போது, “ஐந்து வருடங்கள் இந்தப் படத்த்துடன் பயணித்திருக்கிறேன். இதற்காக பல வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். ஆனாலும் பிரம்மாண்டம் மற்றும் இந்தப் படத்தின் தன்மைக்காகவே இதில் பணியாற்றினேன்..” என்றார்.
பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்த படம் குறித்து கூறியபோது, 'இந்தியத் திரையுலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இது. எத்தனையோ இயக்குநர்கள் என்னுடன் பணியாற்றியபோதும் எனக்கு ராஜமெளலியுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை. 2004-ம் ஆண்டிலேயே நான் ராஜமெளலியுடன் பேசி விஜய்யை வைத்து ஒரு படத்தை நீங்கள் இயக்க வேண்டும்` என்றேன். இப்போது இரண்டு பிராஜெக்ட்டுகளில் பணியாற்ற இருக்கிறேன். அப்புறம் பார்ப்போம்..` என்று அவர் சொல்ல.. அது அப்படியே தள்ளித் தள்ளிப் போய் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது' என்று கூறினார்
இந்த படத்தில் அவந்திகா என்ற முக்கியமான வேடத்தில் நடித்துள்ள தமன்னா இந்த படம் குறித்து கூறியபோது, 'இந்த பிரமாண்டமான படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்காக இயக்குநர் ராஜமெளலி சாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான் முதலில் இந்தப் படத்தோட கதையைக் கேட்கும்போது எனக்கு அப்போ இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க படம்ன்னு தோணவில்லை. ஆனால் இப்போது ரொம்பப் பெருமையாக இருக்கின்றது நான் உண்மையாக ராஜமெளலி சாரோட தீவிர விசிறி. அவருடைய இயக்கத்தில் அற்புதமா, அழகா என்னை நடிக்க வைச்சிருக்கார். என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படம் இதுதான்னு நினைக்கிறேன். இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ரொம்ப சிம்பிள் மேன். ஆனால் இவ்ளோ பெரிய பட்ஜெட்டுல படத்தை எடுத்திருக்கார். அவருக்கும் எனது நன்றி. மேலும் பிரபாஸ், ஸ்வீட்டி அனுஷ்கா, ராணா எல்லோரும் எனக்கு ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தாங்க. இந்தப் படத்தின் பாடல்களை எந்த இடத்துல கேட்டாலும் எனக்கு அந்த டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் தானா வந்திரும். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் எனக்குள்ள இருக்கு.. இந்த மாபெரும் படத்தில் நான் பங்கு கொண்டதற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்..” என்று கூறினார்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அனுஷ்கா கூறியபோது, 'இந்தப் படத்தில் நடிக்க இப்படியொரு வாய்ப்பினை அளித்த இயக்குநர் ராஜமெளலி சாருக்கு எனது நன்றி. என்னுடைய கேரியரில் நான் பார்த்த சிறந்த இயக்குநர்களில் ராஜமெளலி சாரும் ஒருவர்' என்று கூறினார்.
'பாகுபலி 2' என்ற பிரமாண்டமான படத்தை திரையில் பார்த்து ரசிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சினிமா ரசிகர்கள் அனைவரின் எண்ணங்களும் அந்த படத்தை நோக்கியே இருப்பதுதான் இந்த படத்திற்கு கிடைத்த அட்வான்ஸ் வெற்றி. இந்நிலையில் வரும் 28ஆம் தேதி இந்த படத்தின் திரை விமர்சனத்தில் மீண்டும் சந்திப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments