'பாகுபலி' இயக்குனருக்கு ஆந்திர முதல்வர் வைத்த கோரிக்கை
- IndiaGlitz, [Saturday,December 10 2016]
இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'பாகுபலி'. கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.ஆந்திர பிரதேச மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என்று இரண்டாக பிரிந்த பின்னர் ஆந்திர மாநிலத்திற்காக தலைநகர் ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அமராவதி என்று கூறப்படும் இந்நகரத்தின் வடிவமைக்கும் பணி லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நகரத்தின் வடிவமைப்பில் இந்திய பாரம்பரியத்தை கொண்டு வர உதவி செய்யுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ராஜமெளலி விரைவில் லண்டன் குழுவினர்களிடம் அமராவதி நகர் குறித்து ஆலோசிக்க உள்ளார்.
இதுவரை திரைப்படத்திற்காக மட்டுமே பெரிய பெரிய நகரங்களை கலை இயக்குனர்களின் உதவியால் உருவாக்கி வந்த எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது நிஜ நகரத்தையும் உருவாக்க தனது ஐடியாக்களை கூறவிருக்கின்றார்.