2017: முதல் ஆறு மாதங்களில் வெற்றி பெற்ற கோலிவுட் திரைப்படங்கள்

  • IndiaGlitz, [Monday,July 03 2017]

ஒவ்வொரு வருடமும் கோலிவுட் திரையுலகில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வந்தாலும் அவற்றில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் 2017ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் வெற்றி பெற்ற படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படம் என்றாலே அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் படம் 'பாகுபலி 2' என்பதில் எவ்வித தயக்கமும் இல்லை. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய இந்த படத்தின் வசூல் ரூ.1000 கோடியை கடந்து தற்போது ரூ.2000 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. மேலும் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா, டி.ராஜேந்தர் நடித்த 'கவண்' திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

மேலும் விஜய் ஆண்டனியின் 'எமன்', அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்', தனுஷ் இயக்கிய 'பவர்பாண்டி, அட்லி தயாரிப்பில் உருவான 'சங்கிலி புங்கிலி கதவை தொற, அருண்விஜய்யின் 'குற்றம் 23', மற்றும் 'மரகத நாணயம்' ஆகிய படங்கள் ஹிட் படங்களின் பட்டியலில் உள்ளது.

மேலும் ஜெயம் ரவியின் 'போகன்', 'விஜய் ஆண்டனியின் 'கடுகு மற்றும் 'ரங்கூன்' ஆகிய படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் சராசரி வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
2017ஆம் ஆண்டின் ஆறு மாதங்களில் இதுவரை 95 படங்கள் ரிலீஸ் ஆகியபோதிலும் 11 படங்கள் மட்டுமே வெற்றிப்பட பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .இருப்பினும் மீதி இருக்கும் ஆறு மாதங்களில் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2', அஜித்தின் 'விவேகம்', 'விஜய்யின் 'மெர்சல்', சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன், விஜய்சேதுபதியின் 'விக்ரம் வேதா, தனுஷின் 'விஐபி 2' ஆகிய படங்கள் உள்பட பல படங்கள் வெளிவரவுள்ளதால் அதிக படங்கள், வெற்றிப்படங்களின் பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.