'சிறைச்சாலை ஒரு பூஞ்சோலை': சிறைக்கு செல்லுமுன் வீரவசனம் பேசும் பிக்பாஸ் போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சரியாக விளையாடாத இரண்டு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இந்த வாரம் சரியாக விளையாடாத அசீம் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் சிறைக்கு செல்லுமாறு பிக்பாஸ் கட்டளையிடுகிறார். இதனையடுத்து இருவரும் சிறைக்கு செல்கின்றனர்.

’சிறைச்சாலை ஒரு பூஞ்சோலை’ என மைனாவிடம் வீர வசனம் அசீம் பேசியபோது அவரை சட்டை செய்யாமல் ‘சீ போ’ என கடந்து போகிறார். அதே போல சிறை உடை அணிந்த பிறகு சக போட்டியாளர்கள் மத்தியில் டான்ஸ் ஆடி ஜாலியாக ஷிவின் சிறைக்கு செல்கிறார்.

வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சிறைச்சாலை என்றால் அடுத்த வாரம் முதல் வேலையே செய்ய மாட்டேன் என சிறைக்குள்ளிருந்து அசீம் பேசுவதை கேட்டு விக்ரமன் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

கடந்த வாரம் ராம் மற்றும் ஜனனி ஆகிய இருவரும் சிறையில் தள்ளப்பட்ட நிலையில் அவர்கள் அநியாயமாக தாங்கள் சிறைக்குள் தள்ளப்பட்டதாக கமல்ஹாசனிடம் முறையிட்டனர். கமல்ஹாசனும் அதனை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் சிறை சென்றுள்ள அசீம் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் கமல்ஹாசனிடம் இது குறித்து என்ன கூறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.