டெல்லியில் போராடும் விவசாயி அய்யாக்கண்ணு திடீர் மயக்கம். மருத்துவமனையில் அனுமதி
- IndiaGlitz, [Wednesday,April 05 2017]
தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வங்கிக்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்றும் இன்றும் தலைகீழாக நிற்பது, தரையில் உருள்வது, தலையில் முக்காடு போடுவது, பாதி மீசையை எடுப்பது என வித்தியாசமான போராட்டங்களில் தமிழக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டபோதிலும், தேசிய வங்கிகளும் வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சற்று முன்னர் திடீரென மயக்கம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அய்யாக்கண்ணு மட்டுமின்றி பழனிச்சாமி என்ற விவசாயிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.