தாமரை விதைகள் உடலுக்கு அவ்வளவு நல்லதா? மருத்துவப் பயன் குறித்த தொகுப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கானா எனப்படும் தாமரை விதைகள் சீனாவிலும் ஜப்பானில் பரவலாகப் பயன்படுத்தி வரும் நிலையில் சமீபகாலமாக இந்தியர்களிடமும் இதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.
அதுவும் வொர்க் அவுட் மற்றும் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இந்தத் தமாரை விதைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தாமரை விதைகளிலுள்ள சத்துகள், மருத்துவப் பயன்கள், பக்க விளைவுகள் குறித்து அறிந்துகொள்வது அவசியம்.
கிட்டத்தட்ட 7,000 வருடங்களாக உணவுப்பொருளாகவும் காய்கறி பொருளாகவும் இந்தத் தாமரை விதைகள் இருந்து வருகிறது. விதைகளைத் தவிர அதன் தண்டுகளும் மருத்துவ குணம் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தாமரை விதைகளில் வெள்ளைத் தோல் மற்றும் பழுப்பு நிறம் என இருவகைகள் காணப்படுகின்றன.
இந்தத் தாமரை விதைகளைத் தற்போது இந்தியாவில் பாப்கார்ன், அரிசிப் பொரி போன்று வறுத்தே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
100 கிராம் தாமரை விதையில் 388 கலோரிகள் காணப்படுகின்றன. அதேபோல கால்சியம் 313 மி.கி, சோடியம் 7.86 மி.கி, பொட்டாசியம் 49.5 மி.கி, செம்பு 2.52 மி.கி, வெளிமம் 43.9 மி.கி, இரும்பு 16.4 மி.கி, செலினியம் 1.04 மி.கி, மாங்கனீசு 16.6 மி.கி போன்றவை காணப்படுகின்றன.
மேலும் ஈரம் 8-10%, கச்சா கொழுப்பு 3.7%, புரதம் 25%, நார்சத்து 3-4%, கார்போஹைட்ரேட் 65% ஆகியவையும் அடங்கியுள்ளது.
இதனால் தாமரை விதையானது குறைவான கலோரியோடு ஏராளமான ஊட்டச்சத்துள்ள மிகச்சிறந்த உணவுப்பொருளாக மதிக்கப்படுகிறது. இதனால்தான் வொர்க்அவுட் பயிற்சி மேற்கொள்ளும் நபர்களும் இதை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இந்த தாமரை விதைகளில் அதிக புரதம், ஆரோக்கியமான கொழுப்பும் அடங்கியிருக்கிறது. இதைத்தவிர சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும் செயல்படுகிறது.
தாமரை விதைகள் பெரும்பாலும் விரத நாட்களில் பயன்படுத்தக் கூடிய ஒரு உணவாக இருந்துவருகிறது. காரணம் பசியை கட்டுப்படுத்தும் சக்தி இதில் காணப்படுகிறது.
தாமரை விதைகளில் ஃபிளாவனாய்டுகள் இருப்பதால் வலியைப் போக்க உதவுகின்றன என்று 2009 ஆய்வு நிரூபித்து காட்டியிருக்கிறது.
உடலில் கொழுப்பு செல்களான அடிபோசைட்டுகள் உருவாவதை இந்தத் தாமரை விதைகள் தடுக்கிறது. இதனால் கொழுப்பு திசுக்களின் எடையைக் குறைக்கும் ஆற்றலுடன் தாமரை விதைகள் சிறந்த வினை புரிகிறது.
அல்சைமர் நோய் எனப்படும் நினைவாற்றல் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க இந்த தாமரை விதைகள் பயன்படுகிறது. அதாவது நரம்பு செல் சேதத்தை குறைக்கவும் புரோந்தோசயடின்கள் எனப்படும் மூளை முதுமை மற்றும் அறிவாற்றல் குறைபாட்டை குறைக்கவும் இது உதவுவதாக 2014 ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இதைத்தவிர இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.
இந்தத் தாமரை விதைகளைப் பயன்படுத்தும்போது ஒரு சிலருக்கே ஒவ்வாமை ஏற்படுகிறது. அதுவும் அரித்மியா போன்ற இதய நோய் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் தாமரை விதைகளைச் சாப்பிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். காரணம் இந்த விதைகள் அதிக வெப்பத்தை உண்டாக்கும் தன்மை கொண்டவை.
தாமரை விதைகளை அசிரிப்பொரி அல்லது பாப்கார்ன் மாதிரி வறுத்து சாப்பிடலாம். அல்லது பன்னீர் பட்டர் மசாலா மாதிரி கிரீமி தாமரைபொரி கறியாகவும் சமைத்துச் சாப்பிடலாம்.
பாரம்பரிய மிக்க இந்த தாமரை விதைகளை நாமும் பயன்படுத்தி குறைந்த கலோரியோடு அதிக ஆற்றலை பெறுவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout