உலகத்திலேயே முதல் முறையாக சரக்கு பாட்டிலுக்கும் ஆயுதப் பூஜை…
- IndiaGlitz, [Monday,October 26 2020]
மனித நாகரிகத்திற்கு அடிப்படையாக அமைந்த ஒன்று சக்கரத்தின் கண்டுபிடிப்பு. இந்தத் தகவலை சிறிய வயதில் எதோ ஒரு வரலாற்று புத்தகத்தில் நாம் அனைவரும் கண்டிப்பாக படித்து இருப்போம். அப்படி மனித வாழ்வின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் தொழில் நுட்பத்தை நினைவுக் கூரும் வகையிலும் அதை போற்றும் வகையிலும் கொண்டாடப்படும் விழா தான் இந்த ஆயுதப் பூஜை.
அன்றைய தினத்தில் தொழிலுக்கு தேவையான கருவிகளை சுத்தப்படுத்தி, அன்று ஒருநாள் மட்டும் அதற்கு ஓய்வுக் கொடுத்து, அக்கருவிகளையும் இறைவனுக்குச் சமமாக மதித்து பூஜை செய்வது வழக்கம். இந்த வழிபாட்டை இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் மிகச் சிறப்பாக கடைப்பிடித்து வருகின்றனர். பெரிய பெரிய தொழிற்சாலை நிறுவனங்களும் தங்களது தொழில்நுட்பக் கருவிகளைச் சுத்தப்படுத்தி அதற்கு பூஜை போடுவர்.
இந்நிலையில் பெரிய குளத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையின் ஊழியர்கள் தங்களது கடைக்கு வாழை மரம் கட்டி மாலை அணிவித்து வழிபாடு நடத்தி இருக்கின்றனர். அதோடு மது பாட்டில்களுக்கும் மாலை அணிவித்து தீபாராதனை செலுத்தியதுதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
மேலும் இப்படி பூஜை செய்யப்பட்ட மதுபாட்டில்களின் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்த அந்த டாஸ்மாக் ஊழியர்கள் அவரவர் வேலை செய்யும் இடங்களில் ஆயுத பூஜையை கொண்டாடுகின்றனர். அதன்படியே நாங்களும் கொண்டாடுகிறோம் எனத் தெரிவித்து மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றனர்.